மோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு

முஸ்லிம்களின் பெருநாளான ஈகைத் திருநாளை முன்னிட்டு, தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு, நேற்று முன்தினம் (17) இரவுடன் முடிவுக்கு வந்தது. இம்மோதல் தவிர்ப்பை நீட்டிக்குமாறு, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டே, இது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அரசாங்கத்தால் 7 நாட்களுக்கான மோதல் தவிர்ப்பு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதையடுத்தே, 3 நாட்களுக்கான மோதல் தவிர்ப்பை, தலிபான்கள் கடைப்பிடித்திருந்தனர்.

அரசாங்கத்தின் மோதல் தவிர்ப்பு, இன்றுடன் (19) நிறைவுக்கு வரவிருந்த நிலையில், மேலும் 10 நாட்களுக்கு அதை நீடிப்பதாக, ஜனாதிபதி கானி அறிவித்துள்ளார். எனினும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதில் தாக்குதல் நடத்தப்படுமெனவும் அவர் எச்சரித்தார்.

மோதல் தவிர்ப்பை நீட்டிக்கும் தனது அறிவிப்பில், தலிபான்களையும் அதில் இணையுமாறு அவர் கோரியிருந்தார். இந்நிலையிலேயே, அக்கோரிக்கையை தலிபான் நிராகரித்துள்ளது.

இரு தரப்புகளால் கடைப்பிடிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பைத் தொடர்ந்து, இரண்டு பிரிவுகளையும் சேர்ந்தோர், ஒன்றாகக் கூடி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

எனவே, அங்கு சமாதானம் ஏற்படுமென்ற நம்பிக்கைகள் துளிர்விட்டிருந்தன. எனினும் அந்நம்பிக்கை, இப்போது இல்லாமல் போயுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினமும், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னைய நாளும், தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு, 26 பேர் கொல்லப்பட்டிருந்தனர்

Related posts