யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை

(க.விஜயரெத்தினம்)

கண்மூடித்தனமாக எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்த பின்னரே முடிவு எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

மண்முனையில் கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தின் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைத்ததன் பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பாத்துவிட்டுத்தான் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள். அதற்குரிய வழிகாட்டுதல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும்.

கண்ணை மூடிக்கொண்டு, வரதராஜப் பெருமாள், டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு கடந்த காலங்களில் வந்த தடங்களுக்குப் பின்னால் செல்வதற்கு மக்கள் தயாரில்லை.

தங்களுடைய சுகபோகங்களுக்குகாக அவர்கள் ஒரு வேட்பாளரை ஆதரிக்கின்றார்கள் என்றால் அது நிச்சயமாக தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையாது.

தமிழ் மக்கள் தங்களுடைய கலை, கலாசார, விழுமியங்கைளப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் காணி, பொலிஸ், நிதி அதிகாரங்கள் அமையக்கூடிய வகையில் தீர்வுகள் அமையவேண்டும்.

இந்த தீர்வு விடையத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் எந்தளவுக்கு தொலை நோக்குடன் சிந்திக்கின்றார்கள் என்பது எங்களுக்கு முக்கியமாக இருக்கின்றது. ஜே.வி.பி.யில் அனுர குமார திசாநாயக்கவும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் வெறுமனே அபிவிருத்தி என்கின்ற விடையத்தைச் சொல்லிக் கொண்டிருக்காமல், நீடித்திருக்கின்ற இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான ஒரு முடிவைப் பெறக்கூடிய ஒரு அர்த்த புஸ்ட்டியான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவேண்டும். இவ்விடயத்தை தமிழ் மக்கள் ஆழமாகப் பரிசீலித்த பின்னரே தீர்மானம் எடுப்பார்கள்.

Related posts