ரணிலுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்- மீண்டும் சிறிசேன

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளிற்கு டிசம்பர் 31 ம் திகதிக்குள் தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

சிலோன் டுடேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

பொதுத்தேர்தலிற்கு செல்வதே உரிய தீர்வாக அமையமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் இடம்பெற்றால் மக்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றவைகள் மீள இடம்பெறாத நிலையை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள சிறிசேன மக்கள் தங்கள் வாக்களிப்பின் மூலம் ஊழல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவேண்டிய தேவை உருவானால் நான் அவர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆராய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் முன்னரும் தெரிவித்திருக்கின்றேன், தற்போதும் தெரிவிக்கின்றேன், எதிர்காலத்திலும் இதனையே தெரிவிப்பேன் – நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிப்பதால் ஒருவர் பிரதமராகமுடியும் என அரசமைப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன ஜனாதிபதியுடன் விருப்பத்துடனேயே ஒருவர் பிரதமராக முடியும் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

கருஜெயசூரியவும் சஜித் பிரேமதாசவும் என்னை நம்பாததால் பிரதமர் பதவியை நிராகரிக்கவில்லை ரணில் குறித்த அச்சத்தின் காரணமாகவே நிராகரித்தனர் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவை கைவிடுவது குறித்து நான் சிந்திக்கவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts