வரலாற்றுச்சிறப்பு மிக்க அம்பாரை வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாத்த உற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச்சிறப்பு மிக்க அம்பாரை வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாத்த மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 11 ஆம்திகதி திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
வீரமுனைக்கிராமம் கிழக்கிலங்கையின் தென்பாலுள்ள காரைதீவில் இருந்து மேற்கு நோக்கிய அம்பாறை வீதியில் சம்மாந்துறையை அடுத்து அமைந்துள்ள பூர்வீகக் கிராமமாக இருக்கின்றது.
இவ் ஆலயத்தின் வரலாறானது கண்டியை தலைநகரமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்க மன்னன் சோழ நாடு சென்று சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியை மணந்தான். பின்னர் தனது ஆட்சிமைக்குட்பட்ட பிரதேசத்தை தனது மனைவிக்கு காட்டும்பொருட்டு கடல் வழியாக கப்பலில் இலங்கைக்கு செல்ல ஆயத்தமானார். இளவரசியின் தந்தையார் தனது மகளுக்கு துணையாக தனது உறவினர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார் கப்பலானது கடல்வழியாக இலங்கைநோக்கிவருகையில் திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரத்தின் முன்பாக கப்பல் எத்திக்கும் நகராமல் நிற்கவே இதற்கான காரணத்தை கண்டறிய கப்பலில் வந்தோரில் சிலர் கடலில் தேடியபோது ஒரு விநாயகர் சிலை தடுத்து நிறுத்தியமை கண்டு சீர்பாததேவியும் ஏனையோரும் அதிசயித்தனர்.
விநாயகரை மேலே கொண்டுவரப் பணித்த சீர்பாததேவிஇ கப்பல் தங்குதடையின்றி சென்று எங்கு கரை சேருகின்றதோ அங்கு ஆலையம் அமைப்பேன் என வேண்டினார். இளவரசியின் வேண்டுதலையடுத்து ஓடிய கப்பல் மட்டக்களப்பு வாவியினூடாக சென்று வீரமுனையில் கரைதட்டி நின்றது. கீழே இறங்கிய சீர்பாததேவி தன்னுடன் வந்த மக்களைக் கொண்டு வீரமுனையில் விநாயகருக்கு கோயில் அமைத்தாள். இவ்வாலயத் திருப்பணிக்கு உதவுமாறு அயலில் உள்ள மக்களுக்கு வாலசிங்க மன்னன் உத்தரவிட்டான்.
கடல் வழியாக யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக ‘சிந்து யாத்திரை’பிள்ளையார் என பெயர் சூட்டினார் (சிந்து என்றால் கடல்) அது பிற்காலத்தில் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் என அழைக்கப்படலாயிற்று. அத்தோடு இவ்வாலயத்துக்கு சின்னமாக அரவிந்த மலர்செங்கோல்,கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும்,சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமானது எதிர்காலத்தில் சிறப்புற்று விளங்கும் பொருட்டு வயல் நிலங்களையும் வழங்கி மானியமாக சாசனம் செய்து அதனைச் செப்பேட்டில் பொறித்து ஆலயத்தில் சேமிக்கச் செய்தான் வாலசிங்க மன்னன். அத்துடன் இம் மக்கள் சாதி,குல வேறுபாடுகளின்றி அரசியின் பெயரைக் கொண்டு ‘சீர்பாதகுலம்’என வகுத்தான் மன்னன் வாலசிங்கன். சீர்பாததேவியின் வழித் தோன்றல்களான இம்மக்கள் ‘சீர்பாதகுலம்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
இவ் ஆலய உற்றவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 12,13,14,15ஆம் திகதிகளில் சுவாமி அலங்கார வாகனங்களில் உள்வீதி வெளிவீதி வருதல் 16 ஆம்திகதி சனிக்கிழமை மாம்பழத்திருவிழாவும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெற்பத்திருவிழாவும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை கிராம வீதிகளில் உலாவருதலும் 19 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை பால்குடப்பவனியும் மாலை தேர்த்திருவிழாவும் இடம்பெற  இருக்கின்றது 20 ஆம்திகதி புதன்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

Related posts