வவுணதீவு பிரதேசத்தை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுப்போம்

போதைப்பொருள் பாவனையிலிருந்து எதிர்கால சமூதாயத்தை பாதுகாத்து வவுணதீவை போதையற்ற பிரதேசமாகவும் மாற்றி நாட்டில் போதைப்பொருள் பாவனையில்லாத இளைஞர்களையும்,யுவதிகளையும் உருவாக்கவேண்டும் என வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை, தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டம் புதன்கிழமை  (6.6.2018) நடைபெற்றது.

சமூக சேவை உத்தியோகத்தர் பி.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,  வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மது மற்றும் போதைப்பொருட் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான ஸ்டிக்கர்கள்  வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் பிரசூரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-வடகிழக்கில் உள்ள இளைஞர்களையும்,யுவதிகளையும் போதையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.படிக்கின்ற காலத்தில் படிப்பதை வீணாக்கும் நோக்கில் மாணவர்களை மையப்படுத்தி போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுகின்றது.பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை போதைப்பொருள் பாவனைக்கு செல்வதை பெற்றோர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

பல்வேறு வடிவங்களில் மாணவர்களையும்,எங்கள் சமூகத்தையும் தேடி போதைப்பொருள் வியாபாரிகளும்,போதைப்பொருளும் தேடிவருகின்றது.பிள்ளைகளை முறையாக பாதுகாக்க முடியாத பெற்றோர்கள் தங்களின் பிள்ளையும் போதைக்கு அடிமையாகி அவமானத்தை சந்தித்துக் கொள்கின்றார்கள்.எங்களின் சமூகம் போதைப்பொருளை தள்ளிவைக்க வேண்டும்.போதைப்பொருள் பாவனையில்லாத குடும்பங்கள் தினமும் மகிழ்ச்சியிலும்,போதைப்பொருள் பாவிக்கும் குடும்பங்கள் நாளாந்தம் துன்பத்திலும் மிதக்கின்றது எனத்தெரிவித்தார்.

Related posts