விதிமுறைக்கு முரணாக செயற்படுகின்றவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டாம்.ஜனாதிபதிக்கு மகஜர்.கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவிப்பு.

கிழக்கு மாகாண சபைக்கான ஆளுநரை நியமிக்கும் போது கிழக்கு மாகாணத்தில் பல்லினம், பலமொழி, பலகலாசாரம், பலமதம், விகிதாசாரம், தேசியநலன் போன்றவற்றை கொள்கைகளாக ஏற்றுக் கொண்டு அமுல்படுத்தக்கூடிய ஒருவரையே நியமனம் செய்ய வேண்டும். மாறாக ஒரு கட்சிநலன் சார்ந்து, இனம், சமூகம், மதம், ஊழலுக்குச் சார்பாக, விதிமுறைக்கு முரணாக செயலாற்றுகின்றவர்களை ஆளுநராக நியமிக்கக் கூடாதென மு.கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 40வீதம் தமிழர்கள்,37வீதம் முஸ்லிம்கள், 23வீதம் சிங்களவர்கள் வாழுகின்ற வேளை ஒருபக்கம் கடலாலும், மூன்று மாவட்டங்களையும் இணைக்கின்ற மாகாணமாகும்.இதேபோல 1000  மேற்பட்ட குளங்கள் மத்திய மாகாண அரசிற்கு கட்டுப்பட்டவையாகவும், தென்னிலங்கைப் பகுதியில் இருந்து மேலதிகமாக வருகின்ற நீர் அனைத்தும் கிழக்கு மாகாணத்திலுள்ள வாவிகள் ஊடாகவே கடலுக்குச் செல்கின்றன.ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதும் இயற்கையாகும்.இதேவேளை அண்ணளவாக 5இலட்சம் கால்நடைகள் உள்ள இயற்றைச் சூழல் நிறைந்து காணப்படுகின்ற ஒரு மாகாணம் என்பதை மறந்து விடக் கூடாது.

இவைமட்டுமின்றி இனங்களுக்கிடையில் மிகவும் அன்னியொன்னியமாக இருந்து இறுதிக் கால கட்டங்களில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வன்முறையில் சிக்குண்டு முகம் பார்க்க முடியாதளவிற்கு இனமுரண்பாடுகள் தோற்றம் பெற்றன. இம் முரன்பாடுகள் போராட்டத்திலும், அரச நிருவாகத்திலும், அபிவிருத்தியிலும், அரசியலிலும் பெரிதும் தாக்கம் செலுத்தியது.

கடந்த கால அனுபவங்களின் படி முரண்பாடான தாக்கம் செலுத்திய விடயங்களிலிருந்து சமூகத்தை விடுவித்து நல்லாட்சிக்கான சரியான ஒரு திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் அமுல் படுத்த வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும், அரசுக்கும் அதிக பங்குண்டு. இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்ட பல ஆளுநர்கள் சேவைகளை செய்து வந்திருக்கின்ரனரா? என்னும் கேள்வி தொக்கி நிற்கின்றன.

இருந்தாலும் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் அவர்களும், செயலாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வந்தமைக்காக எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இதேவேளை கடந்த காலங்களில் செயலாற்றிய ஆளுனர் அவர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் தெரிந்தோ,தெரியாமலோ தவறாக செயற்பட்டமைக்குரிய ஆதாரங்கள் பலரின் மத்தியில் உள்ளன.

எனவே நியமிக்கப்படப் போகும் ஆளுநர்கள் ஒருதலை பட்சமாக ஒரு சமூகத்திற்கு மாத்திரம் கடமையாற்றாமல்,
கிழக்கு மாகாணத்தின் ஜதார்த்தத்தை புரிந்துகொண்டு நல்லாட்சிக்கான ஒரு களத்தை அமைத்து சரியாக செயல்படுவதற்கு வழி சமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts