விவசாயத்துறையினை முன்னேற்றுவதற்கு அரச கூடிய முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது அரச அதிபர் தகவல்

தற்போதைய அரசு விவசாயத்துறையினை முன்னேற்றுவதற்கு கூடிய முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. இதற்கமைய விவசாய நலன்சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கம் மிகுந்த கவனஞ்செலுத்திவருகின்றது. இத்திட்டத்தினை அமுல் நடாத்தும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நீங்கள் உங்கள் பணிகளை எதிர்வருங்காலங்களில் மிகுந்த அக்கரையுடன் செயல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். விவசாய அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்ராஜா இவ்வாறு தெரிவித்தார்.

 

மாவட்ட விவசாய பணிப்பாளராகக் கடமையாற்றிய வை.பீ. இக்பால் சேவையிலிருந்து இளைப்பாறுவதை முன்னிட்டு மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவுபசார நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் சகல அரச உத்தியோகத்தர்களும் என்றோ ஒருநாள் ஓய்வுநிலைக்கு உள்ளாகியாகவேண்டும். அந்தவகையில் பணிப்பாளர் இக்பாலை குறுகிய காலத்திலேயே அறியமுடிந்திருந்தாலும் அவரின் சிறப்பான பண்புகள் வரவேற்கத்தக்கது. அவரின் விசேட பண்பாக அவரது பிரிவிற்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு கிரமமாக பதிலளிப்பதில் நேர்த்தியான பண்பினைக் கொண்டிருந்தார். விவசாய ஆராய்ச்சித் துறையில் மிகுந்த புலமைத்துவம் கொண்டிருந்த இவர் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நேர்த்தியான விளக்கம் கொடுப்பதில் முன்னிலை உத்தியோகத்தராக இருந்தவர்.

 

சொந்தத் தேவையின் நிமித்தம் அரச கடமையைப் பிரிந்து செல்லும் பணிப்பாளர் இக்பால் எதிர்காலத்தில் மகிழ்ச்சிகரமான குடும்பமாகவும், உயர்ந்தநிலையில் வாழ்வதற்கும் இறைவனைப் பிராத்தித்து பிரியாவிடை வழங்கி வழியனுப்பி வைக்கின்றோம் எனக் குறிப்பிட்டார். 

பணிப்பாளர் இக்பால் பதிலுரை வழங்குகையில் அதிக காலம் வெளிமாவட்டங்களில் பணிபுரிந்திருப்பதால் ஓய்வு நிலை அவசியமெனக்கருதி தான் 28 வருட சேவையின் பின்  ஓய்வு பெறுவதற்கு முடிவுசெய்துள்ளேன். தனது விவசாயப் பணிப்பாளர் கடமையை செவ்வனே நிறைவேற்றுவதற்கு மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர்கள், ஏனைய மாவட்ட திணைக்கள அதிகாரிகள் எனது திணைக்களத்தின் அலுவலக மற்றும் பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் வழங்கிய முழுமையான ஒத்துழைப்பின் பிரகாரமே எனது பணிகளை முழுமையாக மேற்கொள்ள வாய்ப்புக்கிட்டியது. 

 

பல்வேறு சௌகரியங்களுக்கு மத்தியில் எனது திணைக்களப் பணியாளர்கள் இத்துறைக்கு வழங்கிய சேவையின் பயனாகவே இம்மாவட்டம் விவசாயத்துறையில் முன்னேற வாய்ப்புக் கிட்டியது. 

இன்று ஓய்வுநிலைக்குச் சென்றாலும் எதிர்காலத்தில் மாவட்டத்தின் நலன்கருதி விவசாய அபிவிருத்தி சார்ந்த பணிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன்.

 

விவசாயத் துறையின் வளர்ச்சிகருதி அரசாங்க அதிபர் எடுத்துவரும் துரித முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை. பதவியேற்றவுடன் இம்மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் பணியினை விரைவுபடுத்தியமை பாராட்டத்தக்கது. இதேபோல இந்தமாவட்டத்தின் நலன்களை அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் மிகுந்த அக்கரை காட்டிவருகின்றனர். என்னை இன்று சிறப்பாக கௌரவித்து வரவேற்றமைக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி பாராட்டுகின்றேன். 

 

இவரின் ஓய்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட பிரிவுபசார நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர். ஏ. நவேஸ்வரன், தேசிய உரச் செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். சீராஜுன், அரச தகவல் உத்தியோகத்தர். பீ. அப்துல் லத்தீப் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Related posts