வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக்கூட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் நேற்று(சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், திணைக்களங்களின் தலைவர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் அசீஸ், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு தினங்களில் 1352 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 16632 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்கள் 14 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 853 குடும்பங்களை சேர்ந்த 2708 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில வெள்ள அனர்த்தம் காரணமாக வாகரை, கிரான், ஏறாவூர்ப்பற்று, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலகங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகம், அவர்களுக்கான ஏனைய தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் ஆளுனர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில இடங்களில் பாலங்கள் வெள்ளம் காரணமாக உடைந்து சேதமடைந்துள்ளதன் காரணமாக அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

Related posts