ஹக்கீம்,றிஸாத்தின் நிலை நக்குண்டார் நாவிழந்தார் போன்றாகிட்டு : தே.கா அமைப்பாளர் கலாநிதி முஸ்தபா !!

நூருல் ஹுதா உமர் 
 
சரிந்த வாக்குவங்கியை நிமிர்த்த பிரதமர் ரணில் இயக்கிய கூட்டு இராஜினாமா எனும் நாடகத்தில் மு.கா தலைவர் ஹக்கீம் ஹீரோவாகவும் ம.கா தலைவர் றிசாத் வில்லனாகவும் நடித்தனர். இவர்களின் நாடகத்தில் ரத்தின தேரர் கௌரவ வேடம் ஏற்று நடித்தார். இவர்களின் இராஜினாமாவால் சமூகம் அடைந்த நன்மை ஒன்றுமில்லை. ஆனால் அவர்களுக்கு சிறந்த நடிப்பின் வெகுமதியாக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. என தேசிய காங்கிரசின் மேலதிக தேசிய அமைப்பாளரும் சிம்ஸ் பல்கலைக்கழக தலைவருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா தெரிவித்தார்.
 
 தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்,
 
முஸ்லிங்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை தொடர்ந்தும் புறக்கணிக்கும் சமூகமாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் இருப்பதை இனியும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் காலத்தில் சிறிய சிறிய சம்பவங்கள் நடந்தவற்றை காரணம் காட்டி அந்த அரசை நாங்கள் நிராகரித்திருந்தும் பின்னர் வந்த பிரதமர் ரணில் முன்னிலை வகித்த இந்த அரசின் காலத்தில் மிகப்பெரும் சம்பவங்கள் நடந்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பச்சிளம் பாலகர்கள் முதல் பெரியோர்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பது மிக கவலையான ஒன்றாகும். இப்படியான சம்பவங்கள் நடைபெறப்போவதை அறிந்திருந்த பாதுகாப்பு அமைச்சும் இந்த அரசின் முக்கிய புள்ளிகளும் அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
 
இந்த அரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்த முஸ்லிம் தலைமைகள் தம்மை பாதுகாப்பதில் மட்டுமே குறியாக இருந்தனரே தவிர மக்களை பாதுகாக்க முன்வரவில்லை. இந்த நாட்டின் வளங்களை சூறையாட பல திட்டங்களை அந்நிய சக்திகள் தீட்டி இந்த நாட்டை முடக்கி குட்டிசுவராக்க பல வேலைத்திட்டங்களை முடுக்கி விட்டுள்ளனர். அவர்களின் திட்டங்களை முறியடிக்கவேண்டுமாயின் சரியான ஆளுமைமிக்க தலைமை இந்த நாட்டை நிர்வாகிக்க வேண்டும். உலக வரலாற்றில் தைரியமாக போராடி உள்நாட்டு யுத்தத்தை முடித்த பெருமைக்குரியவர்கள் இந்த நாட்டை ஆளவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.
 
மேற்கத்தைய நாடுகளின் தாளங்களுக்கு ஆடுகின்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்டங்களுக்கு இனிமேலும் இலங்கையை நேசித்து வாழுகின்ற யாரும் இடமளிக்க கூடாது. இனவாதங்கள் இல்லாத இலங்கையர்களாக வாழவேண்டும். எமது நாட்டின் சொத்துக்களை பாதுகாக்கவேண்டியது எமது கடமை என்பதை எல்லோரும் நன்றாக மனதில் வைத்திருக்க வேண்டும். இந்த நாட்டில் பல்வேறு சாதனைகளை செய்துகாட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையிலும் அவர்களின் வழி காட்டலிலும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ஸ அவர்கள் இந்த நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவர் என்பதால் இந்த நாட்டின் தலைமைக்கு பொருத்தமானவரே.
 
ஊழல்களை செய்துவிட்டு தமது தலையை காப்பாத்த வேண்டிய தேவைக்காகவும், கடந்த காலங்களில் மஹிந்த அரசிடமிருந்து சலுகைகளை பெற்றுக்கொண்டு முதுகில் குத்திவிட்டு இப்போது அவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள தயாரில்லை என்ற நிலை வந்தவுடன் சஜித் பிரேமதாசா அவர்களை அவுலியா போன்று புகழும் நிலைக்கு சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளார்கள். அவர்களின் அறிக்கைகளை பார்க்கின்ற போது மிக வேடிக்கையாக இருக்கிறது. மூளைக்கும் முண்ணானுக்கும் தொடர்பில்லாத கதைகள் எல்லாம் இப்போது பேசுகிறார்கள். அப்படியல்லாது எமது தேசிய காங்கிரசின் தேசிய தலைமை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்கள் ஒரு கொள்கைவாதி. மஹிந்த அரசுக்கு ஆதரவு வழங்கியதால் தோல்வியை சந்திக்கப்போகிறோம் என அறிந்தும் அவர் கொப்புவிட்டு கொப்பு பாயவில்லை. அதே அணியுடன் எவ்வித சலனமுமில்லாது பயணித்து கொண்டிருக்கிறார். அதனாலையே ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கு இல்லாத மதிப்பும்,மரியாதையும் எங்களின் தலைவருக்கு பெரும்பான்மை இன மக்களிடம் இருக்கிறது.
 
 
பெரும்பான்மை இன மக்கள் தமக்கான ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானித்து விட்டார்கள். அந்த வெற்றியின் பங்காளிகளாக தேசிய காங்கிரஸ் இருக்கும். பணம்,பட்டம், சலுகைகளுக்காக அரசியலை செய்யவேண்டிய தேவை எங்களுக்கு இல்லாமல் இருந்தமையால் தான் சகல மேடைகளிலும், சகல வைபகங்களிலும் எங்களுக்கான முன்னுரிமை கிடைக்கிறது. ஆனால் ஏனைய முஸ்லிம் தலைவர்களின் நிலை நக்குண்டார் நாவிழந்தார் போன்றாகிட்டு. அவர்களுக்கான ஒழுங்கான மரியாதை இந்த அரசில் இருந்திருக்கவில்லை. தமிழ் கூட்டமைப்பின் வார்த்தைக்கு இருந்த மரியாதை இவர்களுக்கு இருக்கவில்லை. ஏனெனில் இவர்களின் வகிபாகம் மிக மோசமானது. 
 
சர்வதேச அரங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மேசையில் வைத்து அரசாங்க பிரதிநிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை சிறு குழுவாக ஏற்றுக்கொண்டவர். அவரிடம் முஸ்லிம் சமூகத்தின் நலனை எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனம். முக்கிய கட்டங்களில் அமைச்சர் ஹக்கீம் அமைதி காப்பது ஆபத்தான ஒன்றாகும். அமைச்சர் றிசாத் அவர்களுக்கு தனது ஊழலை மறைக்கவே நேரமிருக்கிறது. இவர்களை முஸ்லிம் சமூகம் நம்பி இப்போது நடுவீதிக்கு வந்துவிட்டது. தமது போக்குகளால் உரிமைகள் பற்றி பேசமுடியாத ஊமைகளாக இவர்கள் இருக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்
 
பெரும்பான்மை மக்களின் தெரிவாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கூட்டமைப்பின் மொட்டு வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றியின் பங்காளிகளாக தமிழ்,முஸ்லிம் மக்கள் மாற வேண்டும்- என்றார். 

Related posts