500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று பின்னர் திரும்பி வந்து கடமையைப் பொறுப்பேற்காத பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

சுமார் 500 விரிவுரையாளர்களுக்கு எதிராக உயர் கல்வி அமைச்சு இவ்வாறு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக பதவிகளில் பணியாற்றி, உயர் கல்வியை வெளிநாடுகளில் தொடரவுள்ளமையினை காரணம் காட்டி, உயர் கல்வி அமைச்சுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, பின்னர் நாடு திரும்பி கடமையை பொறுப்பேற்காதவர்கள் மீதே, இந்த சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சுடனான ஒப்பந்தங்களை மீறியவர்களுக்கு, அவை குறித்த நினைவு படுத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு சென்ற பெரும்பாலான விரிவுரையாளர்கள் அதனை உதாசீனம் செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, குறித்த விரிவுரையாளர்களில் பலர், தாம் கல்வி கற்க சென்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலேயே இணைந்து பணியாற்றுகின்றமை தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்களை வெளிநாடுகளுக்கு உயர்கல்வி கற்க அனுப்புவதற்காக 800 மில்லியன் ரூபாயை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு செலவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts