இலங்கை சுதந்திரமடைந்தாலும் தமிழினம் சுதந்திரம் அடையவில்லை.

துறையூர் தாஸன்.
 
 
இலங்கை சுதந்திரமடைந்தாலும் தமிழினம் சுதந்திரம் அடையவில்லை என்பதை தற்போதய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதன் வெளிப்பாடுதான் தமிழில் தேசியகீதம் பாடவேண்டாம் என்று தடைவிதித்த விடயமாகும் என, மட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா ஒன்றியத் தலைவர் கவிஞர் த.மேகராசா தலைமையில் மட்டு மகிழடித்தீவு சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அண்மையில்(29) இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இலங்கை சுதந்திரம் அடைந்து 71 ஆண்டு நிறைவுறும் நிலையில் ஏற்கனவே சுதந்திரதின விழாவில் தொடர்ச்சியாக தமிழிலும் தேசியகீதம் பாடப்பட்டுவந்தது. ஆனால் இம்முறை தமிழில் பாடக்கூடாது என அரசாங்கம் அறிவித்தால் அவர்களே தமிழ்மக்களுக்கு இலங்கையில் சுதந்திரம் 71,வருடங்களாக கிடைக்கவில்லை, தமிழர்களை நாம் தொடர்ந்தும் அடிமைகளாகவே நாட்டில் வைத்துள்ளோம் என்பதை தற்போதய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவே பார்க்கின்றோம்.
 
தமிழில் தேசிய கீதம் பாடவில்லை என தமிழ் மக்கள் கவலை கொள்ளப்போவதில்லை மாறாக தமிழர்களுக்கு 71,வருடங்கள் கடந்தும் இந் நாட்டில் அடிமைகளாகவே வாழ்கின்றோம். இதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும் என்று எமது கோரிக்கையை சர்வதேசத்துக்கு மீண்டும் நிரூபிக்க இதை சாதகமாக மாற்றி எமது அரசியல் பணியை தொடர வேண்டுமே தவிர அதற்காக மன்றாடி தமிழில் தேசிய கீதம் பாட அனுமதியுங்கள் என கேட்பதை நாம் தவிர்க்கவேண்டும்.
 
சுதந்திர தினத்தின் போதும், தமிழ் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் தமிழில் பாட வேண்டாம் என தடைவிதித்தால் தேசியகீதம் பாடாமல் தமிழ்மொழி வாழ்த்து மட்டும் பாடி நிகழ்வுகளை நடத்துவது நல்லது.
 
தேசியகீதம் என்பது புரிகின்ற மொழியில் பாடும்போதுதான் தேசியகீதம் தொடர்பான பற்றும் அதன் கருத்து வெளிப்பாடுகளும் அந்தந்த மொழி பேசுவோரை சென்றடையும். அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தேசிய கீதத்தில் உள்ள சொல்லாடல் கருத்துக்கள் விளங்காமல் சிங்கள மொழியில் மட்டும் பாடினால் சிதம்பரசக்கரத்தை பேய் பார்ப்பது போன்ற நிலையே தமிழர்களுக்கு தமிழ் மாணவர்களுக்கும் ஏற்படும்.
 
எனவே தேசிய கீதம் இந்தமுறை 71 ஆவது சுதந்திர தினத்தில் தமிழில் பாடுவதற்கு யாரும் தடை விதித்தால் இந்த இலங்கை நாடு பிரித்தானியரிடம் இருந்து 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி விடுதலை பெற்றாலும், அந்த விடுதலை இந்த சுதந்திர இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற உண்மையை தற்போதய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையே நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

Related posts