நுண்கடன்களை நோக்கம் தவறாமல் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டால் வளமாக முன்னேற முடியும்

சரியான நோக்கத்தில் சரியான தொழில் விருத்திக்காக நுண்கடன்களைப் பயன்படுத்திக் கொண்டால் அதனை ஒரு அடிப்படையாக வைத்து முன்னேற்றம் காண முடியும் என மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி  தெரிவித்தார்.
மண்முனைப் பற்று பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் புலமை காட்டி, உயர் தரத்தில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்பு உதவு  தொகை  வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பெரண்டினா தொழில் வள நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட  வறிய குடும்பங்களைச் சேர்ந்த 154 மாணவர்களுக்கு மாதாந்த உதவு தொகையாக 1000-1500 ரூபாவும் அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் சத்தியானந்தி, நுண்கடன் நிதிகளை உண்மையான தொழில் முன்னேற்றதிற்காகப் பன்படுத்துவோமேயானால் அதன் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டு கொள்ள முடியும். அதனால் வாழ்வாதரத்தைப் பெற்றுக் கொள்வதோடு, பிள்ளைகளின் கல்வி உட்பட உணவு உடை, உறையுள் என்பனவற்றையும் சிறந்த முறையில் அடைந்து வழியேற்றபடும்.
ஆனால், நுண்கடன் பெறுகின்ற நோக்கம் மாறுபட்டிருக்கின்ற ஒரு நிலைமையை இப்பொழுது நாம் சமூகத்தில் காண்கின்றோம். அதனால் பல்வேறு குழப்பங்களும் ஏற்படுகின்றன. உண்மையான சுயதொழில் முன்னேற்றத்திற்காகவன்றி களியாட்ட நிகழ்வுகளுக்காகவும், பூப்பு நீராட்டு விழா, ஆடம்பர உடைகளை வாங்கி அணிந்து கொள்ளுதல், தமது பிள்ளைகளின் அல்லது அன்புக்குரியவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், இப்படிப்பட்ட அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு கடன் பெறுவோமாக இருந்தால் அதன் நோக்கம் மாறுபட்டு நுண்கடன் என்பது சுமையாக மாறி விடும்.
ஆகவே, நோக்கம் தவறி பெறப்படும் கடன்களால் அதிக பளு, கடன்சுமை, நெருக்கடி  அதிகரிதது அதுவே ஒரு பிரச்சினைக்குரியதொன்றாக மாறிவிடும். நோக்கம் தவறிக் கடன் பெற்று செலவு செய்வோர் குருவித் தலையில் பனங்காய் சுமந்த மாதிரி அவர்களது நிலைமை மோசமாகிவிடும், நுண்கடன் நிதி அதன் நோக்கம் தவறிய செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் சமூகத்தில் பல்வேறு சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
எனவே எமக்குக் கிடைக்கும் உதவிகளை சரியான நோக்கத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சம காலத்தில் உள்ள மாணவர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களாக தயார்படுத்தப்படவில்லை என்பது பரவலான ஒரு குறைபாடாக பார்க்கப்படுகின்றது.
இந்த விடயத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், சமூக நல நோக்காளர்கள் என்று ஒட்ட மொத்த சமூகத்திலுள்ளவர்களுமே பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.’ என்றார்.
இந்நிகழ்வில் பெரண்டினா தொழில் வள நிலையத்தின் மாவட்ட முகாமையாளர் சௌந்தரராசா தினேஸ், அபிவிருத்தி சேவைகள் முகாமையாளர் பி. குசாந்த், திட்டமிடல் முகாமையாளர் நிஷாந்தன், திட்ட அலுவலர் எஸ். சுமேதா டில்ஷானி, மட்டக்களப்பு கல்வி வலய உதவித் திட்டப் பணிப்பாளர் வை. சி. சஜீவன், மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பயனாளிகளான மாணவர்கள்., பெற்றோர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts