படுவான்கரை மக்கள் கடலில் வீழ்ந்து சாகும் நிலை ஏற்படும்: வியாழேந்திரன்

“படுவான்கரையின் எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் காணிகள் அபகரிக்கப்படுவதால் இப்பிரதேசத்தில் உள்ள 50 வீதமான மக்கள் கடலில் வீழ்ந்து சாகும் நிலையே ஏற்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எனது வீட்டு முற்றத்திற்கு நாளை யார் உரிமை கொண்டாடுவார்கள் என்ற ஏக்கத்துடன் தமிழ் மக்கள் இன்று அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை அமைக்கப்படுமானால் ஒரு நாளைக்கு 10000ஆயிரம் லீற்றர் வீதம் ஒரு வாரத்திற்கு எழுபதாயிரம் லீற்றர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்.

அதற்கு மேலும் உறிஞ்சப்படலாம். அவ்வாறு நீர் உறிஞ்சப்படுமானால் அந்த பகுதி மூன்று நான்கு வருடங்களில் பாலைவனமாக மாறும். இது முற்று முழுவதுமான விவசாயப் பகுதியாகும்.

இந்தத் தொழிற்சாலை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதன் காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடும் இப்பகுதியில் ஏற்படும்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையானது ஒரு வருடத்தில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு மேலாக பிளாஸ்டிக் தாங்கி வைத்து நீர் வழங்கும் பகுதியாக காணப்படும் நிலையில் அந்த இடத்தில் இந்த தொழிற்சாலைக்கான கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை பிரதேசசபையின் செயலாளர் வழங்கியுள்ளார்.

படுவான்கரைப் பகுதியில் உள்ள பெருவட்டை என்னும் குளம் தனி நபர் ஒருவரினால் அடைக்கப்பட்டுள்ளது. அது கமநல திணைக்களத்திற்குரிய குளமாகும்.

அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளருக்கும் எந்தவித அறிவித்தலும் வழங்காமல் வன இலாகா தங்களுக்குரிய இடமாக கற்களை நட்டு அப்பகுதிகளை அடையாளப்படுத்துகின்றனர்.

இந்தச் செயற்பாட்டினை அவர்கள் தொடர்ந்து செய்வார்களானால் படுவான்கரையில் உள்ள 50வீதமான மக்கள் கடலில் வீழ்ந்து சாகும் நிலையே ஏற்படும்” என வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

Related posts