இந்த அரசை தவிர்த்து எந்த அரசும் பட்டதாரிகள் விடயத்தில் பாகுபாடு காட்டவில்லை.

(எஸ்.குமணன்)
 
இந்த அரசை தவிர்த்து எந்த அரசும் பட்டதாரிகள் விடயத்தில் பாகுபாடு காட்டவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அரசுக்கு நல்ல படிப்பினையொன்றை ஒட்டுமொத்த இலங்கை பட்டதாரிகளும் எதிர்வரும் தேர்தல்களில் காட்டுவோம் என அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரி ஒன்றியம் தெரிவித்துள்ளது. 
 
அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிய ஊடக சந்திப்பு வெள்ளிக்கிழமை (16) காலை காரைதீவில் இடம்பெற்ற போதே வேலையில்லா பட்டதாரி ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். 
 
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட பட்டதாரிகளின் ஒன்றிய தலைவர் ஏ.எச்.ஜெஸீர் குறிப்பிடுகையில். 
 
கடந்த அரசாங்கங்களில் பல இலட்சம் தொழில்வாய்ப்பு நியமனங்கள் வழங்கப்பட்ட போது எந்த அரசும் உள்வாரி, வெளிவாரி என எந்த பாகுபாடும் காட்டவில்லை. இந்த அரசில் வேற்றுமைகள் நிறைந்து காணப்படுகிறது. கஸ்டப்பட்டு படித்த எங்களை மன அழுத்தத்திற்குள்ளாக்கும் கருத்துக்களை இந்த அரசின் முக்கிய பதவி வகிப்போர் பாராளுமன்றத்தில் கூறி வருகிறார்கள். 
 
பிரதமரின் அண்மைய பாராளுமன்ற உரையை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம். அந்த உரையில் உள்வாரி பட்டதாரிகளை முன்னிலைப்படுத்தி பேசியிருப்பதானது எங்களை மட்டுமல்ல எங்களுக்கு விரிவுரை நடத்திய விரிவுரையாளர்கள், நாங்கள் பட்டம் முடித்த பல்கலைக்கழகங்கள், எங்கள் பாடநெறியை வடிவமைத்த  பேராசிரியர்கள் எல்லோரையும் அவமானப்படுத்தும் கருத்தாகும். 
 
சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன எங்களின் விடயத்தில் பாராமுகமாக இருக்கிறார்கள். அவர்களின் தூக்கம் உடனடியாக கலைக்கப்படல் வேண்டும். இனி எந்த முகத்தை வைத்து கொண்டு எங்களிடம் இவர்கள் வாக்கு கேட்டு வருவது. 
 
இந்த நாட்டு மக்கள் அதிருப்தியாக இருக்கும் இவ்வேளையில் எங்களின் நியமனங்கள் விரைவாக வழங்காத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் நடைபெறப்போகும் தேர்தல்களின் போது நாங்கள் சத்தியாகிரகம் இருக்க தயாராக உள்ளோம். இந்த அரசு தேர்தலுக்கு வேட்பாளர்கள் யார் என தெரிவு செய்ய முன்னர் எங்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.
 
எங்களுக்கு ஒரு முடிவு வராத போது நாங்கள் சத்தியாகிரகம் இருப்போம். அந்த தேர்தல் காலங்களில் அரசாங்கத்திற்க்கு அது தலையி்டியாக மாறும். ஆகவே எங்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பாகுபாடுகள் இல்லாமல் எல்லோரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளாக ஏற்று நியமங்களை வழங்குமாறு இந்த அரசிடம் அழுத்தமாக வலியுறுத்தி கேட்கிறோம் என்றனர். 
 

Related posts