யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் தமிழர் கலை. பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது

யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் தமிழர் கலை. பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மரகதலிங்கம் வர்ணகுலசிங்கம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற தமிழர்களுகே உரித்தான கலை கலாசார பண்பாட்டு நிகழ்வில்

பிரதம விருந்தினராக  தாயகத்திலிருந்து வருகை தந்த (மட்டக்களப்பு) கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மரகதலிங்கம் வர்ணகுலசிங்கம் இந்த   ஆடற்கலை  அரங்க நிகழ்வுகள் பற்றியம் தனது ஆழமான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

பல வேலைச்சுமைகளுக்கு மத்தியில் தமிழர்களின் கலை கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை கண்டிக்காப்பதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் முக்கியத்துவம் கொடுப்பதை இட்டு மனநிறைவு அடைகின்றேன். 

தாயகத்தில் யுத்தத்திற்கு முன்னைய காலத்திலும் சரி யுத்த காலத்திலும் சரி இந்தியக் கலைஞர்களுக்கு எந்த விதத்திலும் குறையாத அளவுக்கு எமது கலைஞர்கள் விளங்கியதோடு கலை பண்பாட்டு அடையாளங்களும் பாதுகாக்கப்பட்டு வந்தது. 

ஆனால் இன்று யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் எமது கலை பண்பாடு மிகவும் நலிவுற்ற நிலையிலேயே காணப்படுகிறது. திட்டமிட்ட முறையில் எமது கலை பண்பாடு சீரழிக்கப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டு வரும் துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது. 

உரிமைக்காகப்  போராடப் புறப்பட்ட நாம் இன்று எமது கலை பண்பாட்டைப் பாதுகாக்கவும் அடையாளங் களைப் பாது காக்கவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதாவது இன்று நாம் அரசியல் பலம் குறைந்தவர்களாக ஒரு உளவியல் யுத்தம் செய்ய வேண்டிய நிலையே காணப்படுகிறது.

புலம் பெயர் தேசத்தில் எப்படி கலையை வளர்த்து வருகின்றீர்களோ வடகிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்  கலைக்கல்லூரிகள் ஆரம்பிக்க வேண்டிய அவசர நிலை தோன்றியுள்ளது. 

இதை புலம்பெயர் சமூகம் முன்னின்று நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்த அரங்கிலே உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றேன் என தெரிவித்தார்.

இன்று கலையையும் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் புலம் பெயர்ந்த சமூகத்திற்கு முன்னால் இருக்கும் பெரும் பொறுப்பாகவே நான் இதைக் கருதுகின்றேன் என அவர் கூறும்போது பலத்த கரவொலி மண்டப்ததை நிறைத்தது.

அதே வேளை போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த எத்தனையோ மாணவ மாணவிகள் தங்களது உயர் படிப்பை தொடர முடியாத நிலையில்  அவதிப்படுகிறார்கள். பொருளாதா வசதியின்றி பல்கலை கழகப் புகுநிலையில் பல நூற்றுக் கணக்கான மாணவர்கள் தமது உயர் கல்வியை தொடர முடியாது இருக்கின்றார்கள்.

 அவர்களில் சிலருக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு சில நல்ல உள்ளங்கள் தமது பொருளாதார பங்களிப்பை உதவிட முன் வந்திருப்பது மகிழ்ச்சியான விடயமாக அமைந்துள்ளது. எனினும் அது முழுமை அடைவதற்கு பல பொருளாதார பலம் படைத்த நல்லுள்ளம் கொண்டோர் முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்விற்கு   சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த நாட்டியக் கலைமணி திருமதி ஞானசுந்தரி வாசன் மற்றும் சங்கீத இரத்தினம் திருமதி அம்பிகா பாலகுமார் அவர்களும் கருத்துரை வழங்கியதுடன் இறுதியில் இசைக்கலைஞர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் ஆசிரியர் பரதசூடாமணி திருமதி கௌசலா ஆனந்தராஜா அவர்களுக்கும் நாட்டிய நர்த்தகி செல்வி கார்த்திகாவின் பெற்றோர் திரு திருமதி இராஜநாயகம் சௌந்தரராணி அவர்களால் பொன்ஆடை போற்றி பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts