நாங்கள் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தாலும் எமது பிரச்சனையை இலங்கை அரசாங்கத்துடன் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதனை பலர் பல்வேறு கோணங்களில், வியாக்கியானங்களில் வகைப்படுத்துகின்றார்கள் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனொல்ட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் மேற்கொண்டு மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் இது ஒரு மிகவும் மகிழ்ச்சிக்குரிய சந்திப்பு. பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி கலந்திருப்பது வரவேற்கத்தக்கது. யாழ்ப்பாணத்திலும் இதுபோன்றே எமது உறுப்பினர்களும் கட்சி பேதமின்றிய ஏற்பாடுகளையே முன்னெடுத்திருக்கின்றோம். உண்மையில் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் கட்சி சார்ந்து வாக்களித்துள்ளார்கள் என்பது ஐயத்திற்குரிய விடயம். அவர்களின் கிராமத்தில் இருக்கின்ற உறவுகள் என்ற அடிப்படையில் தான் இந்தத் தேர்தலில் வாக்களிப்பு இடம்பெற்றது. எனவே இது தேசியத்தின் மீது ஏற்பட்ட ஒரு தளர்வு அல்ல என்பதே என்னுடைய கருத்து. இருப்பினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்களுக்கு ஆகக் கூடிய சேவையை வழங்குதல் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
கட்சிகளுடைய கொள்கைகள் நிலைப்பாடுகள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இருப்பினும் மாநர மக்களின் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து பயணிக்க வேண்டும். இதன் மூலமே நாங்களும் ஒரு சிறப்பான சேவையை ஆற்றினோம் என்கின்ற உளத் திருப்தியையும் பெற்றுக் கொள்ள முடியும்.
எதிர்வரும் 18ம் திகதி மாநகரசபைகளின் முதல்வர்களுக்கான மாநாடு நடைபெறவுள்ளது. மாநகர முதல்வர்களின் கடமைகளும் பொறுப்புக்களும் என்ற விடயம் மாத்திரம் அல்லாமல் எங்களுடைய உறுப்பினர்கள் சார்ந்த நலத்திட்டங்கள் அத்துடன் எமது அதிகாரங்கள், அதிகார எல்லைகள் சம்மந்தமாகவும் துலங்கள் நிலைமை காணப்படுகின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்றவகையில் எங்களுக்கு இருக்கக் கூடிய அதிகாரங்கள் சம்மந்தமாகவும் இந்த மாநாட்டில் கலந்துரையாடவுள்ளோம்.
யாழ் மாநகரசபையைப் பார்க்கும் போது மட்டக்களப்பு மாநகரசபையில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எம்மை வந்து சந்திக்கின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் உறவுகளிடம் நாங்கள் ஒருபோதும் வடக்குக்கு மட்டும் என்று கோரிக்கை முன்வைப்பதில்லை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் சேர்த்து தான் எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
யாழ் மாவட்டத்தில் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்டு பல அரசியற் காரணங்களால் முன்நகர்த்தப்படாத பல திட்டங்கள் கிடப்பில் இருந்தது. அவற்றைத் தெரிந்து பிரதமரின் யாழ் விஜயத்தின் போது அவற்றை பகிரங்கப் படுத்தியதன் விளைவாகவ அலரி மாளிகையில் இடம்பெற்ற எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரோஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட என்னுடைய விடயத்தோடு சம்மந்தப்பட்ட ஏனைய அமைச்சர்கள், துறை சார்ந்த திணைக்களத்தின் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பில் எம்மால் வரையப்பட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருட இறுதிக்குள் சில செயற்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பிரதமர் முன்வந்துள்ளார்.
நாங்கள் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தாலும் எமது பிரச்சனையை இலங்கை அரசாங்கத்துடன் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதனை பலர் பல்வேறு கோணங்களில், வியாக்கியானங்களில் வகைப்படுத்துவதனால் ஏற்படும் ஒரு குழப்ப நிலைதான் எமது கட்சிகளுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகள்.
தற்போது சிலர் கூறிக்கொண்டிருக்கின்றார்கள் இந்த உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு தளர்வு எற்பட்டிருக்கின்றது என்று அதற்குப் பதில் நான் ஆரம்பத்திலேயே தெரிவித்துள்ளேன். இந்தத் தேர்தல் எவ்வாறானதொரு தேர்தல் என்பதை அனைவரும் அறிவர். இருப்பினம் ஏன் அவ்வாறு கூறப்படுகின்றது என்றால் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்தமையே காரணம் என்கின்றார்கள்.
இந்த இலங்கைத் தீவில் ஒரு புதிய அரசியற் சாசணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற போது அது நிச்சயமாகத் தமிழரின் நலன்சார்ந்த ஒரு விடயமாக அமைய வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காகத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் சில விடயங்களுக்கு ஆதரவளிக்கின்றதே தவிர அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள விருப்பத்தினால் அல்ல என்பதனை எமது மக்களும், சகோதர அரசியலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.