கிழக்குமாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கிழக்குமாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு தொடர்பாக அதிவிசேச வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.
இந்த அதிவிசேச வர்த்தமானி அறிவித்தலின்படி இதுவரை நடைமுறையில் இருந்துவந்த கொடுப்பனவுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மாநகரசபை நகரசபை பிரதேசசபை ஆகியவற்றின் தலைவர்கள் உபதலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்த மற்றும் தொலைபேசி எரிபொருள் பாவனை உள்ளிட்ட சகல கொடுப்பனவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகரசபை முதல்வருக்கு தொலைபேசிப்பாவனைக்கொடுப்பனவாக மாதம் 4000ருபாவும் பிரதிமுதல்வருக்கு 2500ருபாவும் உறுப்பினர்களுக்கு 1000ருபாவும் வழங்கப்படவேண்டும்.
அதேபோன்று நகரசபை தவிசாளருக்கு தொலைபேசிப்பாவனைக்கொடுப்பனவாக மாதம் 3000ருபாவும் பிரதிதவிசாளருக்கு 2000ருபாவும் உறுப்பினர்களுக்கு 1000ருபாவும் வழங்கப்படவேண்டும்.
இதேவேளை பிரதேசசபை தவிசாளருக்கு தொலைபேசிப்பாவனைக்கொடுப்பனவாக மாதம் 2500ருபாவும் உபதவிசாளருக்கு 1500ருபாவும் உறுப்பினர்களுக்கு 1000ருபாவும் வழங்கப்படவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி தலைவர்களுக்கான தொலைபேசிக்கொடுப்பனவு குறைக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை உறுப்பினர்களுக்கு புதிதாக 1000ருபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதை சுட்டிக்காட்டமுடியும். உறுப்பினர்களுக்கு இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொலைபேசிக்கொடுப்பனவு நடைமுறை இருக்கவில்லை.
இதேவேளை வாகனங்களின் எரிபொருள் பாவனைக் கொடுப்பனவிலும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
அலுவலகரீதியான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக நாளொன்றுக்கு மாநகரமுதல்வருக்கு 1500ருபாவும் தங்குமிடவசதிக்காக 3000ருபாவும் வழங்கப்படும். பிரதிமுதல்வருக்கும் ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றுவதற்காக 1250ருபாவும் தங்குமிடவசதிக்காக 2500ருபாவும் வழங்கப்படும்.
அலுவலகரீதியான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக நாளொன்றுக்கு நகரசபைத்தவிசாளருக்கு 1250ருபாவும் தங்குமிடவசதிக்காக 2500ருபாவும் வழங்கப்படும். பிரதிதவிசாளர் ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றுவதற்காக 1000ருபாவும் தங்குமிடவசதிக்காக உபதவிசாளருக்கு 2000ருபாவும் உறுப்பினர்களுக்கு 1500ருபாவும் வழங்கப்படும்.
அலுவலகரீதியான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக நாளொன்றுக்கு பிரதேசசபைத்தவிசாளருக்கு 1250ருபாவும் தங்குமிடவசதிக்காக 2500ருபாவும் வழங்கப்படும். உபதவிசாளருக்கும் ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றுவதற்காக 1000ருபாவும் தங்குமிடவசதிக்காக உபதவிசாளருக்கு 2000ருபாவும் உறுப்பினர்களுக்கு 1500ருபாவும் வழங்கப்படும்.
இக்கொடுப்பனவுகள் பிரதேசசபை அமைந்துள்ள மாவட்டத்திற்கு வெளியே இடம்பெறும் உத்தியோகபூர்வ கருத்தரங்கு மற்றும் நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும்எனவும் மாதத்திற்கு 10நாட்களுக்கு மேற்படலாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உபசரணைச்செலவாக மாதாந்தம் மாநகரமுதல்வருக்கு 3000ருபாவும் பிரதிமுதல்வருக்கு 1500ருபாவும் வழங்கப்படும். நகரசபை தலைவருக்கு 2500ருபாவும் உபதலைவருக்கு 1250ருபாவும் பிரதேசசபைத்தவிசாளருக்கு 2000ருபாவும் உபதவிசாளருக்கு 1000ருபாவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக அதிவிசேச வர்த்தமானியில் பல கொடுப்பனவுகளிலும் மாற்றம்கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு உள்ளுராட்சி மன்றத்தலைவர்கள் இலங்கையில் கிழக்கில்மட்டும் இந்த அநீதி இடம்பெறுகிறதெனக்கூறி தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டிவருகின்றனர். தலைவர்கள் கூடி கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர். மொத்தத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே இவ்வறிவித்தல் அமுலாகுமா? அல்லது விலக்கிக்கொள்ளப்படுமா? அல்லது சில திருத்தங்களுடன் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்