கோட்டாபய ராஜபக்ச அவர்களின் அரசாங்கமானது குறைந்தது 20வருடங்கள் நீடிக்க வாய்ப்பிருக்கின்றது. பலமான எதிர்க்கட்சியில்லை.ஆகையால் இந்த அரசாங்கத்துடன் நெருக்கமாக செய்படுகின்றபோதுதான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியும் என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் திருமதி வித்தியா முரளிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தற்போது தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்திருக்கின்றது. நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு வீதம் வெல்வோம் என்பது அந்த மக்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்து மக்களும் எங்கள் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர்.இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. நான் மட்ட்களப்பு மாவட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாரிய சேவையாற்றியிருக்கின்றேன். அந்த சேவையூடாக பயனடைந்த மக்கள் உண்மையாக நன்றி இருக்குமானால் அவர்கள் எங்களுடைய கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 3000பட்டதாரிகளுக்கு எனது கைகளால் நியமனங்களை வழங்கியிருக்கின்றேன். 1000ற்கும் மேற்பட்ட துறைசார் வேலைத்திட்டங்களான போக்குவரத்து,வங்கி,வைத்தியசாலைகளில் பல நியமனங்களை வழங்கியிருக்கின்றேன். பல்கலைக்கழகங்களில் சிற்றூழியர்களாக 185பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கின்றேன்.
பாரிய அபிவிருத்திகளையும் செய்திருக்கின்றேன்.50கோடி ரூபா செலவில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையை அமைத்துக் கொடுத்தேன். கிழக்கு மாகாணத்திற்கு புற்றுநோய் வைத்தியசாலையை அமைத்துக் கொடுத்தேன்.மண்முனைத்துறைப் பாலம், கல்லடிப் பாலம் போன்றவற்றை அமைத்துக் கொடுத்தேன்.பல்கலைக்கழகத்திற்கு 912கோடி ரூபா நிதியை ஒதுக்கி பல்கலைக்கழக வளாகங்களை அமைத்துக் கொடுத்தேன். விஞ்ஞான தொழினுட்ப பாடசாலைகளை அமைத்துக் கொடுத்தேன். படுவான்கரை பிரதேசத்திற்கு மின்சாரம்,குடிநீர் என்பவற்றை பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். ஆகவே மக்களாகிய நீங்கள் இதனை நன்கு சிந்தித்து எங்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன்.
மட்டக்கள்பில் தற்போது பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மக்கள் யாருக்கு வாக்களிப்பதென்ற குழப்பத்தில் இருக்கின்றனர். நீங்கள் குழப்பமடையாமல் எங்களுடைய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியானது வடக்கு கிழக்கில் தையல் இயந்திரச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. தையல் இயந்திரச் சின்னம் என்பது உங்களுக்கு பரீட்சயமான சின்னமாகும்.கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாங்கள் தையல் இயந்திரச் சின்னத்தில் தான் போட்டியிட்டோம். ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்களுடைய பிரதிநிதிகள் இருந்தால்தான் அபிவிருத்திகளை தொடர்ச்சியாக கொண்டுசெல்ல முடியும். ஆகவே மக்கள் இந்த வாய்ப்பினை இழக்கக்கூடாது. கோட்டாபய ராஜபக்ச அவர்களின் அரசாங்கமானது குறைந்தது 20வருடங்கள் நீடிக்க வாய்ப்பிருக்கின்றது. பலமான எதிர்க்கட்சியில்லை.ஆகையால் இந்த அரசாங்கத்துடன் நெருக்கமாக செய்படுகின்றபோதுதான் நாங்கள் மாற்றத்தினை உருவாக்க முடியும். பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் பற்றி உங்களுக்குத் தெரியும்.இந்த நெருக்கத்தை பயன்படுத்தி எங்களுடைய மக்களை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது. ஆகவே இதனை புரிந்துகொண்டு எங்கள் குழந்தைகளின் எதிர்காலம்,பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமானால் சிறந்த முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்.
மட்டக்களப்பில் போட்டியிடுகின்ற மற்றைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தகுதியான வேட்பாளர்களையும் நேர்மையான வேட்பாளர்களையும் நாங்கள் நிறுத்தியுள்ளோம். நாங்கள் எதற்காக யுத்தத்திற்கு சென்றோமோ அதன் வடிவம் மாற்றப்பட்டிருக்கின்றது. அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே வித்தியாபதி அவர்களை நான் வேட்பாளராக நிறுத்தியுள்ளேன். ஆகவே எங்கள் கட்சியை வெற்றிபெறச்செய்யவேண்டிய பொறுப்பு எங்கள் மக்களுக்கு இருக்கின்றது.
2010,2011ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின்போது மூன்று உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி இரவுபகலாக மக்களை காப்பாற்றினோம்.ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட துணிந்து அதனை செய்யவில்லை. ஆகவே மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
மட்டக்களப்பில் சிறந்த வேட்பாளர்களை எந்தக் கட்சியினரும் நிறுத்தவில்லை.எல்லோரும் மக்களால் வெறுக்கப்படுகின்ற சக்திகளாகவே இருக்கின்றனர்.சிறந்த குணாதிசயமும் தலைமைத்துவப் பண்பும் உடைய வேட்பாளர்களை எவரும் நியமிக்கவில்லை.ஆனால் நாங்கள் நியமித்திருக்கின்றோம். ஆகவே எங்களுக்கு வாக்களியுங்கள்.அரசாங்கத்துடனான நெருக்கத்தையும்; உறவையும் பேணிக்கொண்டு உங்களுக்கு அபிவிருத்திகளை நாங்கள் கொண்டுவருவோம். தமிழனின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்,மத்திய அரசாங்கத்துடன் கூட்டணியாக இருந்து அபிவிருத்திகளையுமு; மேற்கொள்ள வேண்டும் ஆகிய இரு நோக்கங்களுக்காகவே நாங்கள் தேசியக் கட்சிகள் எதிலும் போட்டியிடாமல் மட்டக்களப்பில் தனித்து போட்டியிடுகின்றோம்.