புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கொம்மாதுறை பகுதியில் வசிக்கும் யுவதியின் மருத்துவச் சிகிச்சைக்காக சுவிஸ் உதயம் அமைப்பினால் நிதியுதவிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் குறித்த யுவதியின் சிகிச்சைக்காக 4 இலட்சம் ரூபாவினை சுவிஸ் உதயம் வழங்கியுள்ளது.
கொம்மாதுறையில் மிகவும் வறிய நிலையில் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றின் இளம் பெண்ணுக்கு புற்று நோய் தாக்கியுள்ளது.
யுவதி உயர்கல்வியை கற்றுவரும் நிலையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதனால் குறித்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கவேண்டிய நிலையுள்ளது.
இந்த நிலையில் குறித்த யுவதிக்கு சிகிச்சையளிப்பதற்கு சுமார் 10 இலட்சம் ரூபா தேவையாகவுள்ள நிலையில் அதற்குரிய பணத்தினை திரட்டுவதற்கு முடியாத நிலையில் சமூக சேவைகள் திணைக்களத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இதற்கான வேண்டுகோளை சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுத்திருந்தார்.
இதற்கமைய சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் ,தொழிலதிபர் க.துரைநாயகம்,நிர்வாக சபை உறுப்பினர் குமாரவேல் பாலா,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரை சந்தித்து குறித்த யுவதிக்கான சிகிச்சைக்கான பணத்தினை வழங்கிவைத்தனர்.
இப்பணத்தினைப் பெற்றுக்கொண்ட யுவதியின் பெற்றோர்கள் சுவிஸ் உதயம் அமைப்பினருக்கும் மாவட்ட அரச அதிபருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்