அரச வேலை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகளை வைத்து பலர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றார்கள். இதற்கு ஒருபோதும் சம்மந்தப்பட்ட பட்டதாரிகள் இடமளிக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கேட்டுக்கொண்டார்.
தமக்கு அரச வேலை கோரி போராட்டங்களை மேற்கொண்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட பட்டதாரிகள் அன்மையில் வழங்கப்படவுள்ள பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனத் தெரிவில் உள்வாரி பட்டதாரிகள், வெளிவாரி பட்டதாரிகள் என பாகுபாடுத்தப்பட்டு அதில் வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தீர்வினை குறித்த அமைச்சின் ஊடாகவோ அல்லது நீதி மன்றத்தின் ஊடாகவோ பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் மாவட்ட செயலகத்தில் உள்ள பட்டதாரிகளின் தரவுளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதில் உள்ள எண்ணிக்கைளை விட தற்பொழுதுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும் வேலை வாய்ப்புகளை வழங்கும் போது 40 வயதை அண்மித்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பிரதான கோரிக்கைகளாக முன்வைத்தனர்.
இதன்போது பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், பட்டதாரிகளின் முதலாவது கோரிக்கையான பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனத் தெரிவில் வெளிவாரி பட்டதாரிகளையும் உள்ளீர்த்தல் எனும் விடயத்தில் தாம் பொறுப்பான அமைச்சர்களிடமும் செயலாளர்களிடமும், உள்வாரி – வெளிவாரி என்ற பேதம் இல்லாமல் சகலருக்கும் தொழில் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த போது அவர்கள் தற்போது 16500க்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 வெளிவாரிப் பட்டதாரிகளுக்கும், பட்டதாரி பயிலுனர் நியமனம் எதிர்வரும் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டு பதினான்கு நாட்களுக்குள் உள்வாரி பட்டதாரிகள் கடமையைப் பொறுப்பேற்காவிடின் அந்த வெற்றிடத்திற்கு பதிலாக வெளிவாரி பட்டதாரிகள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளனர். காரணம் சில உள்வாரி பட்டதாரிகள் வேறு தொழில்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு குறித்த காலத்திற்குள் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நீதி வழங்கப்படாமல் அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பத்தில் எமது கட்சியில் உள்ள சிரேஸ்ட சட்டத்தரணிகளின் சட்ட உதவிகளையும் பெற்றுத்தர முடியும். அதுமட்டுமன்றி உங்களது ஏனைய கோரிக்கைகளான தரவுகளை இற்றைப்படுத்தும் வேலைத்திட்டத்தினை மாவட்ட செயலகத்தின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதோடு, 40 வயதை அண்மித்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எமது கட்சித்தலைவர்களையும் இணைத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தெளிவுறுத்தி அதற்கான தீர்வினையும் பெற்றுத் தரமுடியும்.
அத்தோடு இன்னும் ஒரு மாதத்தில் செயற்றிட்ட அலுவலகர் என்ற நியமனத்தில் பத்தாயிரத்தி ஐநூறுக்கு மேற்பட்ட வெளிவாரி பட்டாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. எனவே வெளிவாரிப் பட்டதாரிகள் கலக்கமடையத் தேவையில்லை.
பட்டதரிகளின் நியாயமான போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினது ஆதரவு எப்போதும் இருக்கும். இருந்தும் அரசியலில் மக்கள் செல்வாக்கினை இழந்தவர்கள் அரச வேலை கோரி நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உங்களைப் போன்ற பட்டதாரிகளை வைத்து அரசியல் இலாபம் தேட முற்படுகின்றார்கள். இவர்கள் அரசாங்கத்தையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் விமர்சித்து விட்டு அவர்களது கடமை முடிந்தது என்று சென்று விடுவார்கள் இவர்களால் வெறுமனே ஆர்ப்பரிக்க மட்டுமே முடியுமே தவிர தீர்வினை பெற்றுத்தர முடியாது. இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு ஒருபோதும் சம்மந்தப்பட்ட பட்டதாரிகள் இடமளிக்கக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கேட்டுக்கொண்டார்.
மிகவும் சுமுகமாக இடம்பெற்ற மேற்படிக் கலந்துரையாடலில் கிட்டத்திட்ட 60க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டு தமது கோறிக்கைகளை முன்வைத்திருந்தனர்.