மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் செயல்திட்டங்களின் ஒன்றான பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றின் பதிவுச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளும் சட்ட வழிகாட்டல்களும் எனும் தொனிப்பொருளில் செயலமர்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பிரதேச செயலக பிரிவுகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்பிள்ளைகளின் பாதுகாப்பின் மேம்பாடு தொடர்பான பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று தெற்கு கிறான், கோறளைப்பற்று வடக்கு வாகரை, ஏறாவூர் பற்று செங்கலடி, மண்முனை மேற்கு வவுணதீவு, போரதீவு பற்று வெல்லாவெளி,போன்ற பிரதேச பிரிவுகளில் மேற்கொண்ட களவிஜயங்கள் மற்றும் களமேற்பார்வையின் கீழ் பெற்றுக்கொண்ட அறிக்கையின் குறித்த கிராமங்களில் பிறப்பு மற்றும் திருமணம் பதிவுகள் பதிவு செய்யப்படாத நிலையில் வாழ்கின்ற மக்களுக்கான சான்றிதழ் பதிவுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு செயல்திட்டமாக குறித்த பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றின் பதிவுச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளும் சட்ட வழிகாட்டல்களும் தொடர்பான செயலமர்வு மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் மாவட்ட பணிப்பாளரும், சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி சிறீகாந்த், கிழக்கு வலயத்தின் உதவி பதிவாளர் நாயகம் கந்தசாமி திருவருள், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ் .ராஜ் பாபு, ஆகியோர் கலந்துகொண்டனர்.