மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம்(2018) ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 27 திகதி வரையும் 4751 பேர் டெங்குநோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.நாடளாவிய ரீதியில் 49278பேர் டெங்குநோயினால் பீடிக்கப்பட்டு இனங்காணப்பட்டுள்ளார்கள்.இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் ஏனோதனோ எனும் நிலைப்பாட்டில் பொதுமக்களும்,அரச உத்தியோகஸ்தர்களும் செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தின் பிராந்திய பணிப்பாளர் Dr.கிரேஸ் நவரெட்ணராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் டெங்குநோய் தாக்கம் பற்றியும்,முறையான திண்மக்கழிவகற்றல் பற்றியும் ஆராயும் கூட்டம் வெள்ளிக்கிழமை(28)மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட செயலத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ,சுகாதார வைத்திய அதிகாரிகள்,டெங்கு நோய் கட்டுப்பாட்டுகுழு பொறுப்பாளர்கள்,மாவட்ட பூச்சியாளர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள்,செயலாளர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
பிராந்திய சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்:-
எதிர்வரும் புதிய ஆண்டின் தை,மாசி,பங்குனி மாதங்களில் டெங்கு உருவாகக்கூடிய வாய்ப்புள்ளது.மழைக்காலங்களில் முறையாக திண்மக்கழிவகற்றலை மேற்கொண்டு எம்மக்களுக்கு ஒழுங்காக சேவைசெய்தும், டெங்குநோய் பொதுமக்களை பீடிக்காதளவுக்கு அரச உத்தியோகஸ்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமாகும்.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கழிவுகளை பொது இடங்களிலும்,வடிகாண்களிலும்,தனியார் காணிகளிலும் வீசுவதால் வீசப்படும் உக்கமுடியாத கழிவுப்பொருட்களில் டெங்கு நுளம்பு முட்டையிட்டும்,அதன் பெருக்கம் அதிகரித்து சிறுவர்கள்,முதியோர்களை தொற்றுக்குள்ளாக்கின்றது.பொது இடங்களில் வீசுவதை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தின் டெங்கு நோயாளிகளை குறைப்பதற்கும்,மாவட்டத்தை தூர்நாற்றத்தில் இருந்து தவிர்ப்போம்.
இவ்வாறு டெங்கு நோயாளர்களை உருவாகுவதற்கு எம்மாவட்டத்தில் உள்ளவர்களே பிரதான காரணமாகும்.பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கிடைக்கும் கழிவுகளை முறையாக தரம்பிரித்து கொடுக்கவேண்டும்.திண்மக்கழிவகற்றலை சேகரிக்கும் உள்ளுராட்சி மன்றத்தின் வேலைத் தொழிலாளர்கள் “பொதுமக்கள் தந்தால் வாங்குவோம்” என்று இல்லாமல் திண்மக்கழிவகற்றலை தரம்பிரிப்பதையும் சொல்லிக்கொடுக்கவும்.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சங்கங்கள்,அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,கிராமசேவையாளர்கள்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பொலிசாரின் உதவியுடன் வீடுகள்,திணைக்களங்கள் மாதாந்தம்,வாராந்தம் டெங்கு பரிசோதனை மேற்கொண்டு டெங்கற்ற சூழலை உருவாக்க வேண்டும்.மக்களை முழுமையாக டெங்கிலிருந்து பாதுகாப்பதில் விழிப்பூட்ட வேண்டும்.இவ்விழிப்பூட்டலில் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு விவேகமாக செயற்படுத்துங்கள்.
ஐந்து தொடக்கம் பத்தொன்பது (5வயது-19வயது)வயதுக்குட்பட்டவர்களே 1600பேர் மாவட்டத்தில் டெங்கினால் பாதிக்கப்படுகின்றார்கள்.25வயது முதல்-30 வயது வரையுள்ளவர்களின் தொற்றும் இரடிப்பாகவுள்ளது.படிக்காதவர்களை கொண்டு சிறப்பான திண்மக்கழிவகற்றலை மேற்கொண்டு வருகின்றபோதிலும் படித்தவர்கள் திண்மக்கழிவகற்றலில் இடையூறு விளைவிக்கின்றார்கள்.இதனால் கழிவுப்பொருட்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டும்,திண்மக்கழிவுகள் தூர்நாற்றவடை வீசி பல சிக்கல்களை உருவிக்கியுள்ளது.எனவே மட்டக்களப்பு மாவட்டத்தை டெங்கை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பு தாருங்கள் எனத்தெரிவித்தார்.