தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளரின் செயற்பாட்டினை கண்டித்து பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக்கழகங்களினால் களுதாவளையில் உள்ள பிரதேசசபைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் கடினபந்து கிரிக்கட் விளையாடுவதற்கு தற்காலிக தடை விதிக்க சபை தீர்மானித்துள்ளதாகவும் அதனடிப்படையில் தற்காலிகமாக கடினபந்து கிரிக்கட் விளையாட தடைவிதிக்கப்படுவதாக தவிசாளரினால் பெரியகல்லாறில் உள்ள 13விளையாட்டுக்கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக்கழகங்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் குறித்த மைதானம் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில் தவிசாளரினால் எழுந்தமானமாக குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பிரதேசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பொது விளையாட்டு மைதானம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்க்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று காலை 10.00மணிக்கு வருமாறு கோரி தவிசாளரினர் பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்று காலை 10.00மணியளவில் பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் பிரதேசசபைக்கு வருகைதந்தபோது பிரதேசசபை மூடப்பட்டிருந்ததுடன் கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இளைஞர்களின் விளையாட்டுத்திறனை அழிக்கும் செயற்பாட்டினை தவிசாளர் சிலரின் தூண்டுதலின்பேரில்முன்னெடுப்பதா க கூறி கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வருகைதந்து விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்ததுடன் எந்தவித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்,பொது அமைப்புகளினால் பிரதேசசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் திங்கட்கிழமை தமது பொது விளையாட்டு மைதானத்தில் கடினபந்து விளையாட விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
1994ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த மைதானத்தில் கடினபந்து கிரிக்கட் விளையாடிவருவதாகவும் இன்று தன்னிச்சையாக தவிசாளர் குறித்த மைதானத்தில் விளையாடுவதற்கு தடைவிதித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த மைதான காணி 1986ஆம் ஆண்டுகாலப்பகுதியில் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலையில் குறித்த விளையாட்டு மைதான காணியை பலர் அபகரித்துள்ள நிலையிலும் அருகில் தற்காலிகமாக வழிபடப்பட்ட ஆலய மதில் எந்தவித அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதற்கு மட்டும் பிரதேசபை தடைவிதித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகல்லாறில் உள்ள 13க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கழகங்கள்,பொது அமைப்புகள்,ஆலயங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.