கிழக்கு மாகாண புவியியற் சூழலையும் அம் மக்களின் தேவைகளை புரிந்துகொண்ட ஒரு ஆளுநரால் தான் சிறப்பாக செயற்பட முடியும். அந்த வகையில் இது எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம். இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ. எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
எனது பதவியை இவ் மாகாணத்தின் மூவின மக்களுக்கும் சமமான சேவைகளைச் செய்ய பயன்படுத்துவதற்காய் திடசங்கற்பத்தோடு இருக்கிறேன் என்றார்.அவர் தனது எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,..கிழக்கு மாகாணத்தின் தமிழ்பேசும் ஒருவருக்கு முதன் முதலாய் ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. அரசியலைப்பை பொறுத்தவரையில் நான் மத்திய, மாகாண அரசாங்கங்களில் பல்வேறு பதவிகளை நீண்டகாலம் வகித்தவன். கிழக்கு மக்களின் வாழ்வையும் அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்தவன். ஆதலால் எனது பதவிக் காலத்தில் அவ்வாறான புரையோடிப்போன பிரச்சினைகளை தீர்த்து வைக்க அதீத அக்கறை காட்டுவேன். என்னைப் பொறுத்தவரையில் மத்திய அரசிலும், மாகாண அரசிலும் நிறைந்த நண்பர்களும், அரசியல் பிரதானிகளும் இருக்கிறார்கள். அவர்கள் எனது வேண்டுகோள்களை நிறைவேற்றுவார்கள். எனது முதலாவது பணி கிழக்கு மாகாணத்தின் மூவின மக்களின் மத்தியில் ஆழமான புரிந்துணர்வையும் இறுக்கமான ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கும்.சில பிரச்சினைகள் கிழக்கைப் பொறுத்தவரை பல தசாப்த காலமாக இருந்து வருகிறது. உதாரணத்திற்கு தொண்டர் ஆசிரியர் நியமனத்தை எடுத்துக் கொள்ளலாம், மற்றைய மாகாணங்களில் இவ் நியமனங்கள் கச்சிதமாய் நிறைவேறியுள்ளன. ஆனால், கிழக்கில் இது நிறைவவேறவில்லை. இதனை நிறைவேற்றுவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவந்த கடற்றொழில் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் மூடப்பட்டுள்ளது.மட்டக்களப்பின் அபிவிருத்தி மையம் அதனை இயங்க வைக்க அமைச்சர்களோடும் அப்போதைய ஆளுநரோடும் தொடர்பு கொண்டது. கலந்துரையாடல்களையும் நடாத்தியது. ஆனால் அது நிறைவேறவில்லை, இதனால் பல தொழிலாளர்கள் தொழிலிழந்து இருக்கிறார்கள். பல மீனவர்கள், இறால் பண்ணையாளர்கள் அசௌகரிகங்களை சந்தித்து வருகிறார்கள். ஆதலால் இதனை இயங்க வைக்க முழு முயற்சிகளை எடுப்பேன். சில அரச நிர்வாகங்கள் குளறுபடியாய் இருக்கிறது.அவைகளால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைப்பதில்லை. இவைகளை சீர் செய்யும்போது மக்கள் பல நன்மைகளையடைவார்கள். ஆதலால் எனது பதவி, அதிகாரம் யாவும் மக்களின் நலனுக்காகவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவுமே இருக்கும். எனது பதவிக்காலம் ஒரு வருடம் மாத்திரமே. அதற்குள் பல விசயங்களை சாதிக்க, வேகமான செயற்பாடுகள் அவசியமாகிறது என்றார்.