ஆன்மீகத்துறவி சுவாமி விபுலானந்தரின் 119 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் அரசாங்கமானது புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை கொடுத்து மத மாற்றுவதை தடை செய்யுமாறு கோரியும்,மாடுகளை வெட்டுவதற்கு தடையை விதிக்குமாறு கோரியும் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று சனிக்கிழமை(10)காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை இடம்பெற்றது.
இலங்கை சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் 12 மாவட்டங்களில் 23 இடங்களில் இவ் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.சிவசேனை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருநாள் உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
பசுஞ் சோலைக்குள் முகிழ்த்த சமயத்தை பாதுகாத்து இந்த மண்ணின் மரபுகளை பேணவேண்டும்.இந்த மண்ணுக்கே உரித்தான பண்பாட்டை வளர்த்து சைவசமயம் இந்த மண்ணிலே துளிர்விட்டு வளர்வதற்கு அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் சைவத்துக்கு முன்னுரிமை கொடுத்தும்,மதமாற்றத்திற்கு தடை விதித்தும்,மாடுகைளை வெட்டுவதற்கு தடைவிதித்து மாற்றத்தை கொண்டுவரவேண்டுமென கோரிக்கைகள் முன்வைத்து அடையாள உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.