ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை தேர்தல் நடாத்துவது தொடர்பில் அழுத்தம் கொடுக்கவில்லை

கடந்த ஆட்சிக்காலத்தில் வடகிழக்கில் மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டிருந்தால் வடகிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தூக்கியெறியப்பட்டிருக்கும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்று மாகாணசபை தேர்தல் நடாத்துவது தொடர்பில் எந்தவித கோரிக்கையினையும் முன்வைக்காமல் இழுத்தடிக்கப்பட்டதன் விளைவே இன்றுவரை மாகாணசபை தேர்தலை நடாத்துவதில் பாரிய இடைவெளி காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதற்கு டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எந்த அருகதையும் இல்லை.
எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் அரசியல் தெளிவூட்டல்களை செய்து அதன்மூலம் இம்முறை அதிகவாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில்பெற்று அதிலும் அதிகூடிய விருப்புவாக்குகளை எங்கள் தலைவர் பெற்றதன் மூலம் கிழக்கின் தலைமைத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
கிழக்கில் தலைமைத்துவங்கள் உருவாக்கப்படக்கூடாது என்பதில் மேட்டுக்குடி அரசியல் தலைமைகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது என்பதன் வெளிப்பாடாகவே அவரின் கருத்துஉள்ளது.
1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்பு ஆயுத ரீதியாக உள்நுழைந்து பின்னர் அரசியல் ரீதியாக மாற்றம்பெற்ற செல்வம் அடைக்கலநாதன்,தான் கடந்துவந்த பாதையினையும் திரும்பிப்பார்க்கவேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஓருபோது தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து,மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை நடுத்தெருவில் விட்ட கட்சியல்ல.இன்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்புக்காக பாடுபட்டுவரும் கட்சியாகும்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பற்ற விமர்சிப்பதற்கு துளியளவும் அருகதையில்லாத நிலையில் கட்சியை பற்றி விமர்சிக்க அவர் எவ்வாறு முனைந்திருக்கின்றார் என்றால் வடகிழக்கு மாகாணத்தில் தமது அரசியல் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாது,மக்களினால் தொடர்ந்து தூக்கியெறியப்படுகின்ற சூழலில் தங்களின் இருப்பு பறிபோகும் நிலையில் ஒரு அரசியல் யுக்தியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை விமர்சிக்க முனைகின்றனர்.அவர்களைப்போன்று அரசியல் அதிகாரம் கிடைக்கமுன்னர் ஒருபேச்சும் அரசியல் அதிகாரம் கிடைத்த பின்னர் ஓருபேச்சு,கூட்டமைப்புகுள் ஜனநாயகம் இல்லாத சூழல்போல் எங்களுக்குள் இல்லை.எமது கட்சியில் ஜனநாயகம் உள்ளது.மக்களின் ஆணையை மதித்து தொடர்ந்து மக்களுக்காக பயணிப்போம்.
அண்மைக்காலமாக 20வது திருத்த சட்டம் 13வது திருத்த சட்டம் தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.
தமிழர்களின் போராட்டம்காரணமாக தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஆககுறைந்த அதிகாரமான மாகாணசபை முறைமையினைக்கூட கிழக்கு மாகாணத்திலும் வடக்கு மாகாணத்திலும் உள்ள தமிழர்கள் அனுபவிக்கமுடியாத சூழ்நிலையில் ஏனைய ஏழு மாகாணங்களிலும் அனுபவிக்கப்பட்டுவந்தது.
2008க்கு பின்னர்தான் கிழக்கு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு மாகாணசபை அதிகாரங்களை அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் சூழ்நிலையுறுவாக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் 2012ஆட்சி அமைக்கப்பட்டு 2017 நிறைவடைந்த நிலையில் மாகாணசபை தேர்தல் நடாத்தப்படவேண்டிய சூழல் இருந்தும் ஆளும் அரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்று மாகாணசபை தேர்தல் நடாத்துவது தொடர்பில் எந்தவித கோரிக்கையினையும் முன்வைக்காமல் இழுத்தடிக்கப்பட்டதன் விளைவே இன்றுவரை மாகாணசபை தேர்தலை நடாத்துவதில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.அவர்கள் பலமாக இருந்தபோது மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.அவர்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஒதுக்கியிருக்கின்றார்கள்.மாகாணசபை தேர்தலும் முன்னர் நடைபெற்றிருந்தால் வடகிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தூக்கியெறியப்பட்டிருக்கும்.இதன்காரணமாகவே தம்மை பாதுகாப்பதற்காக மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பு செய்துகொண்டிருந்தார்கள்.மீண்டும் இவர்கள் மாகாணசபை தேர்தல் நடாத்தப்படவேண்டும் என குரல்கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
13வது திருத்த சட்டம் முற்றுமுழுதாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாகவுள்ளதுடன் தமிழர்கள் எதற்காக போராடினார்களோ அதற்காக எமது கட்சி தொடர்ந்து குரல்கொடுக்கும்.

Related posts