யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கில், ஆகக்குறைந்தது 20 ஆயிரம் தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடியவாறு, கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தமது அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா, யாழ். மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக, பிரதமதர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், யுத்த காலத்தில் நமது மண்ணில் வாழமுடியாத சூழ்நிலையால், அச்சம் காரணமாக வெளியேறி வெளிநாடுகளில் வாழும் வியாபாரச் சிந்தனையும் அக்கறையும் கொண்டோரை, இந்தத் திட்டத்தில் உள்ளீர்த்து, அவர்களை முதலீட்டு முயற்சிகளில் ஈடுபடச்செய்து, தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கை வலுப்படுத்தப்படும் என்று கூறினார்.
வடக்கில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் குறிப்பிட்ட கைத்தொழிற்றுறைத் திட்டம், தொடர்பில் நேற்று (22) காலை, முதலமைச்சருடனும் பேசியதாகவும் விரைவில் அவரைச் சந்தித்து, இது தொடர்பில் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தீர்க்கமான முடிவெடுப்பதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏனைய மாகாணங்களைப் போலன்றி, இந்த மாவட்டத்தில் வித்தியாசமான முறையில் குறைந்த வரிச்சலுகையுடன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக, அமைச்சர் ரிஷாட் மேலும் கூறினார்.