ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி (புதன்கிழமை) உத்தரவிட்டார்.
அம்பாறை, ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம் களப்புப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்தச் சென்றபோது எற்பட்ட சர்ச்சை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசசபையின் தவிசாளர் பேரின்பராஜா உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேச களப்புப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஒரு பிரிவினர் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேசசபைத் தவிசாளர் பேரின்பராஜா மற்றும் சபை உறுப்பினர்கள் சென்றிருந்த நிலையில் அங்கு நில ஆக்கிரமிப்பாளருக்கும் பொதுமக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது கைகலப்பு ஏற்பட்டதுடன் அமைக்கப்பட்ட வேலிகளை பொதுமக்கள் உடைத்து எறிந்ததில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையின் சுதந்திரகட்சி, ஜக்கிய தேசியக் கட்சிகளைச் சேர்ந்த இரு பெண் உறுப்பினர்களைக் கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.