கல்முனை பழைய தபாலக வீதிக்கு ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டத் தீர்மானம்

கல்முனை பழைய தபாலக வீதிக்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரை சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
 
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல்
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த வீதியின் பெயரை ஏ.ஆர்.மன்சூர் வீதி என பெயர் மாற்றம் செய்வதற்கான பிரேரணை மாநகர முதல்வரினால் முன்மொழியப்பட்டது.
 
1977ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் சுமார் 06 வருடங்கள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சராகவும் பதவி வகித்து, இப்பிராந்தியத்திற்கும் நாட்டுக்கும் இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி உன்னத சேவையாற்றி, எம்மை விட்டு மறைந்த மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயரை இவ்வீதிக்கு சூட்டுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாக மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது குறிப்பிட்டார்.
 
இப்பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் வழிமொழிந்ததுடன் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கல்முனைத் தொகுதிக்கு ஆற்றியிருக்கின்ற சேவைகளை நினைவுகூர்ந்து, அன்னாரின் பெயரை பொருத்தமான வீதியொன்றுக்கு சூட்டுவது அவசியம் எனவும் அதற்காக எடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். அவர் தமது அரசியல் பொது வாழ்வில் கறைபடியாத கரங்களைக் கொண்ட ஓர் அரசியல் தலைமை என்று எல்லோராலும் போற்றப்படுகிறார் என்றும் உறுப்பினர் ஹென்றி சுட்டிக்காட்டினார்.
 
இதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இப்பெயர் சூட்டலுக்கு கல்முனை மாநகர சபை தீர்மானிப்பதாகவும் இதற்காக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மாநகர முதலவர், சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.
 

Related posts