ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த நிகழ்வும் “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும்

மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை  நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினம் எதிர்வரும் 31.05.2022 திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்
18 ஆவது ஞாபகார்த்த நிகழ்வும் “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும்  எதிர்வரும் 29.05.2022 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
 
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன்  தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 29ஆம் திகதி  காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வின்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, நினைவுச் சுடரேற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மௌன அஞ்சலியும் இடம்பெறவுள்ளது.
 
அதனைத் தொடர்ந்து கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், சிவராம் ஞாபகார்த்த மன்றமும் (சுவிஸ்) இணைந்து வெளியிடவுள்ள “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
 
நிகழ்வின் வரவேற்புரையை  கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய உபதலைவர் க.ஜெகதீஸ்வரனும், தலைமையுரையினை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான, இ.பாக்கியராஜா நிகழ்த்தவுள்ளதுடன், நூல் வெளியீட்டுரையினை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் இ.தேவஅதிரன் நிகழ்த்தவுள்ளார்.
 
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களினால் குறித்த நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும்  சிரேஸ்ட ஊடகவியலாளருமான அ.நிக்சன் மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம் ஆகிய இருவரினாலும்  ஊடகர் ஜீ.நடேசன் தொடர்பான சிறப்பு நினைவுப்பகிர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இக் கட்டுரைத் தொகுப்பு நூலில் நடேசனின் நண்பர்கள், பத்திரிகையாளர்கள், நெருக்கமானவர்கள் எனப் பலரும் தமது நினைவகளைப் பகிர்ந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு 17ஆவது ஞாபகார்த்த தினத்தில் வெளியிடவென உத்தேசிக்கப்பட்டிருந்த போதும் கொவிட் சூழல் காரணமாக குறித்த நூல் வெளியீடானது பிற்போடப்பட்ட நிலையில் இவ்வருடம் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்நிகழ்விற்கு அனைத்து ஊடகவியலாளர்களையும், சமூக நலன் விரும்பிகள், மதகுருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஒன்றியத்தின் செயலாளர் வ.சக்திவேல் அழைப்புவிடுத்துள்ளார்.

Related posts