ஜனாதிபதி அவர்களை நாங்கள் எந்த விடயத்திற்காக ஜனாதிபதி ஆக்கினோமோ அதனை மறந்து தமிழ் மக்களை ஏமாற்றும் விதத்திலேயே னாதிபதி ஒக் 26ல் தீர்மானத்தை எடுத்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இன்று 07 கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்இ
தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விடயங்கள் மற்றும் ஜனாதிபதியின் தன்னிச்சையான நடவடிக்கைகளைப் பார்க்கின்ற வேளையில் நான் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதனை ஏற்க முடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது. உண்மையில் ஜனாதிபதி அவர்கள் தற்போது இருக்கின்ற 19வது திருத்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயற்பட்டு இருக்கின்றார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை.
ஒரு நாட்டின் பிரதான தளமாக பிரதான தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு இடமாக பாராளுமன்றம் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் தீர்மானங்கள் எடுத்தால் அதனை நடைமுறைப்படுத்துவதே வரலாறாக இருக்கின்றது. ஆனால் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்ற நிலைமையைப் பார்க்கின்ற போது தீர்மானங்கள் வெறுமனே கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளன.
யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றம். ஆனால் ரணில் அவர்களை பிரதமராக நியமிப்பதற்கு பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் கொடுத்தாலும் அதனைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு ஆணவமாக தெரிவித்து உதாசீனமாக ஜனாதிபதி அவர்கள் செயற்படுவது போலவே இருக்கின்றது.
இவ்வாறான கேலிக்கிடமான விடயங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது. ஜனாதிபதி அவர்களை நாங்கள் எந்த விடயத்திற்காக ஜனாதிபதி ஆக்கினோமோ அதனை மறந்து தற்போது தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றாரா என்கின்ற கேள்வியும் எங்களுக்கு இருக்கின்றது. பலர் எதைக் கூறினாலும் ஒக்டோபர் மாதம் எடுத்துக் கொண்ட தீர்மானமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விடாமுயற்சி தொடர்ச்சியான அழுத்தத்தின் ஊடாக சர்வதேச அழுத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வரைபு நொவம்பர் மாதம் 07 திகதி வர இருக்கின்ற நிலையில் அவர் பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார் என்றால் உண்மையில் அவர் இனவாதத்தை கருத்திற் கொண்டு சர்வதேசத்தையும்இ தமிழ் மக்களையும் ஏமாற்றும் விதத்தில் அமைந்ததாகவே என்னால் கருத முடிகின்றது.
மஹிந்த அவர்கள் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ வரக் கூடாது என்று தமிழ் மக்கள் எண்ணியிருக்கின்ற நேரத்தில் ஜனாதிபதி அவர்கள் எடுத்த இந்தத் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு செய்த துரோகமாகவே கருதுகின்றோம். ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராகவே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடைமுறைகள் அனைத்தும் இருந்து வருகின்றது என்று தெரிவித்தார்.