(க. விஜயரெத்தினம்)
மலேசியா என்ற ஒரு நாடு அப்போது இருந்ததில்லை. அன்று மலாயா என்ற நாடு தான் இருந்தது. அது காடுகளால் அடரந்து போய்க் கிடந்தது அந்த நாடு.வெள்ளையர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் அக்காடுகளை அழித்து அதனை நாடாக்கினார்கள் என உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் (மலேசியா) தலைவர் பா.கு.சண்முகம், தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் அப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள்,மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும், உலர் உணவுப் பொருட்களும், கற்றல் உபகரணங்களும், வழங்கும் நிகழ்வு வெல்லாவெளியில் அமைந்துள்ள இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் போரதீவுப்பற்றுப் பிரதேச சிவில் அமைப்பின் தலைவர் வ.சக்திவேல் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (11) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
அப்போது மலேசியாவில் இலட்சக்கணக்கான தமிழர்கள் இறந்து போனார்கள்.இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற யுத்தம்போன்று அல்ல.வெள்ளையர்களின் அவர்களது வளத்திற்காக பல இலட்சக்கணக்கான தமிழர்களை அப்போது அந்நாட்டில் அழித்தார்கள். அதிலிருந்து மீண்டு வந்து தற்போது மலாயா என்ற ஒரு நாடு மலேசியாவாக மாறியிருக்கின்றது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழர்கள்தான் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழர்களுடைய இரத்தம், வியர்வை, உழைப்பு அனைத்துத்தான் மலேசியா நாடு உருவாவதற்குரிய காரணமாகும்.அதுபோல் இங்குள்ள தமிழர்களும், கஸ்ட்டம் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு,எப்படி வளரலாம்,என்பதை முன்நிறுத்தி பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் உதவியாக இருப்போம்.ஆனால் நிலமை தற்போது மாறியிருக்கின்றது. வசதிபடைத்தவர்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுகின்றார்கள்.அதிகளவு பணம் செலவு செய்து திருமணம் நடாத்துகின்றார்கள்.பல ஆயிரம் ரூபாக்களை வீண்செலவு செய்து ஆலயங்களில் வெடிக்கொழுத்தி பூசை செய்கின்றார்கள்.இன்னும் பல இலட்சங்களை வீண் செலவு செய்கின்றார்கள்.இது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கின்ற மிகப் பெரிய நோயாக இருக்கின்றது.இந்த நோய்க்குள் நாம் அகப்பட்டு விடக்கூடாது.இயன்றளவு தமிழர்கள் படிப்பதற்கும்,வாழ்வதற்கும் தமிழர்கள் உதவி செய்வதில்லை.இதனால் பல தமிழர்கள் தொடர்ச்சியாக ஏழைகளாகவும்,எழியவர்களாகவும் உள்ளார்கள்.கோடிக்கணக்கில் பணம் செலவு செய்வதைவிட தமிழர்களின் நல்ல விடயங்களுக்காகவும்,கற்றல் கற்பித்தல் விடயங்களுக்காகவும் உதவி செய்து தமிழர்களை முன்னேற்றுவோம்.இதற்கு ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.தமிழர்கள் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள்.அப்போதுதான் தமிழினம் இருக்கும் என்பதை உலகத்தமிழர்கள் அடையாளம் காண்பார்ரள்.
வலது குறைந்தவர்களுக்கு குறிப்பாக கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்காக என்ன செய்ய வேண்டும்.அதனை எவ்வாறு இங்கேயே உற்பத்தி செய்யலாம் என்பதை திட்டமிடுங்கள் அதற்கு உலக மக்கள் உதவி செய்வார்கள். இதற்கு நாங்களும் உதவி செய்யத் தயாராக இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.