புலிகள் வானத்தில் இருந்து விழுந்தவர்கள் இல்லையே இலங்கை பிரஜைகள்தான்! பா.அரியநேத்திரன்,மு.பா.உ

(சா.நடனசபேசன்)
புலிகள் கேட்டதைத்தான் ஐந்து தமிழ்கட்சிகளும் கேட்கிறார்கள் என கோத்தபாயாவை ஆதரிக்கும் விமல்வீரவன்ச, வாசுதேவ நானாயக்காற தொடக்கம் காத்தான்குடி வேட்பாளர் ஹிஷ்புல்லா நானா வரை பல இனவாதிகள் கொக்கரிக்கின்றனர்.
 
புலிகளும் தமிழ்மக்களுக்காக போராடியவர்களே அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை அவர்களும் இலங்கை பிரஜைகளே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
 
வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ்கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாரித்த கோரிக்கைகள் புலிகள் கேட்ட கோரிக்கை என இனவாதம் பேசும் சிங்கள பேரினவாதிகள் குற்றம் சுமத்துவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறிய அரியநேத்திரன்.
 
விடுதலைப்புலிகள் தந்தை செல்வா முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே ஆயுதம் ஏந்தி போராடினார்களே தவிர விடுதலைப்புலிகள் தானாக எந்த கோரிக்கையும் முன்வைத்து போ ராடவில்லை.
 
கடந்த 71,வருடங்களாக உரிமைக்கான விடுதலைக்கான அரசியல் போராட்டங்களும் அதனூடான செயல்பாடுகளுமே இன்று எமது தலைவர்களும் புலம்பெயர் தமிழ் சமூகமும் தொடர்சியாக முன்எடுக்கின்றனர் புதிதாக வேறு எதையும் தமிழர்கள் கேட்கவில்லை.
 
மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் சிங்கள பெரும் தேசிய இனத்தலைவர்கள் தமிழர்களை பகடைக்காய்களாக பாவித்து இனவாதம் பேசி இனப்படுகொலை செய்த வரலாறே இன்றுவரையும் தொடர்கிறது.
 
விடுதலைப்புலிகள் முள்ளிவாய்காலில் மௌனித்தாலும் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் அவர்களின் செயலை மீட்டுப்பார்க்காமல் எந்த சிங்கள தலைவர்களும் தமது தேர்தல் பிரசாரங்களை முன்எடுக்கமுடியவில்லை.
 
புலிகளுடன் தமிழர்களை ஒப்பிட்டுமேசுவது புலிகளாக தமிழர்களை வர்ணிப்பது எல்லாம் இன்று நேற்றல்ல 1977,ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் சகல தேர்தல்களிலும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து வெற்றி காணும் ஒரு துர்ப்பாக்கிய சித்தாந்தமே இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு என்றும் இரத்தத்துடன் ஊறியுள்ளது.
 
தற்போது யார் போரை நடத்தியது போரில் வெற்றிபெற்றது என்பதில் நானா நீயா என அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஹீத்பிறேமதாசாவை ஆதரிக்கும் சரத்பொன்சேகாவுக்கும் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கோத்தபாயாவுக்கும் இடையில் யார் கீறோ என்ற போட்டி உள்ளது இதில் புலிகளை அழித்தவர் தாமே என கூறி சிங்கள மக்களுடைய வாக்குகளை கவரும் முயற்சியில் இரண்டு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் செயல்படுகின்றனர் இதில் இருந்து என்ன விளங்குகிறது என்றால் புலிகளையும் தமிழர்களையும் இனப்படுகொலை செய்தவரே நாட்டின் தலைவர் என்ற எழுதப்படாத விதி இலங்கை அரசியலில் இரண்டற கலந்துள்ளது.
 
வடக்கு கிழக்கு தமிழர்கள் மத்தியில் பம்மாத்து அரசியல் முகமும் தென்பகுதியில் இனவாத உண்மை முகமும் காட்டி வாக்குகளை பெறும் பிரசாரம் பிரதான இரண்டு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முன்எடுத்துள்ளனர்.
 
அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜீத்பிரமதாசாவின் வாக்குறுதிகளை பிரதமர் ரணிலும், மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கோத்தபாயாவின் வாக்குறுதிகளை எதிர்கட்சி தலைவர் மகிந்தராஷபக்சவும் தமிழ்தலைமைகளைக்கு வழங்குவதையே இந்த ஜனாதிபதி தேர்தலில் காணமுடிகிறது.
 
அதாவது வாக்குறுதி வழங்குவது ஒருசாரார் வேட்பாளர்கள் இன்னொருசாரார் இது எந்தவகையில் ஏற்கமுடியும் நிறைவேற்று அதிகாரங்கள் முழுமையாக நீக்கப்படாத நிலையில் வெற்றிபெறும் ஜனாதிபதி யாராக இருப்பினும் தாம் எந்த வாக்குறுதிகளும் தரவில்லை என்நழுவக்கூடிய நிலையே இந்த தேர்தலில் காணமுடிகிறது.
 
ஒருவேளை சஜீத்பிரமதாசா ஜனாதிபதியானால் பிரதமராக ரணிலும் கோத்தபாயா ஜனாதிபதியானால் பிரதமராக மகிந்தவும் வரலாம் என்று அவர்கள் இருவரும் வாக்குறுதிகளை வழங்கினாலும் வெற்றிபெறும் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்கள் இன்னும் உள்ளது என்பதால் வாக்குறுதிகளை நம்பமுடியாத நிலை உண்டு.
 
தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்தும் இணைந்து முன்வைத்த கோரிக்கை தமிழீழம் இல்லை தமிழர்கள் சுதந்திரமாக இந்த நாட்டில் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்காக சுயநிர்ணய உரிமையுள்ள கோரிக்கை மட்டுமே இதைக்கூட விளங்காத அல்லது விளங்கிக்கொண்டு சிங்கள மக்களுக்கு உசுப்பேத்தும் பிரசாரங்களை முன்எடுக்கும் இனவாத சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளவரை இந்த நாடு உருப்படாது என்பதே உண்மை எனவும் மேலும் கூறினார்.  

Related posts