அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அமைய, அஞ்சல் பணியாளர்களின் இரண்டு பிரதான கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் அதனை உடனடியாக அமுல்ப்படுத்துமாறு கோருகின்றனர்.
ஆனால், எந்தவொரு நிறுவனமும் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டால், அதனை அப்போதிலிருந்தே அமுல்ப்படுத்த முடியாது என அஞ்சல் சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவற்றில் நடைமுறை ரீதியான விடயங்கள் உள்ளன.
சம்பள நிர்ணய ஆணைக்குழு செவ்வாய்கிழமைதான் கூடி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும்.
இதையடுத்து, அந்தத் தீர்மானத்தை அமைச்சரவையில் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு நடைமுறை ரீதியான விடயங்கள் உள்ளன.
எனவே, அஞ்சல் தொழிற்சங்கங்கள் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
எனினும், தமது கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி அஞ்சல் பணியாளர்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த நிலையில், அவர்கள் இன்று மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு அருகில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதித்துறை பணிகளுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கான மாற்று வழியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள அதன் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா,
நீதிமன்றதினால் பிறப்பிக்கப்படுகின்ற அறிவித்தல்கள் பிரதிவாதிகளுக்கு உரிய காலத்திற்குள் கிடைக்கப் பெற வேண்டும்.
இந்த நிலையில், அஞ்சல் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்வதனால், அந்தப் பணிகளில் பாதிப்பு ஏற்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், குறித்த பணிப்புறக்கணிப்பு அடுத்த வாரமும் தொடருமாயின், நீதிச் சேவைகள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் பதிவாளர்களுடன் கலந்துரையாடி இதற்கான மாற்று வழியொன்றை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.