கல்முனைவலயத்துக்குட்பட்ட, நிந்தவூர் கோட்டத்தின்கீழுள்ள அட்டப்பளத்திலுள்ள ஒரேயொரு தமிழ்ப்பாடசாலையும் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அங்குள்ள பாடசாலைச்சமுகம் கவலை தெரிவிக்கிறது.
அங்குள்ள அட்டப்பளம் விநாயகர் வித்தியாலயமே இவ்விதம் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. ஆசிரியர் போதுமானளவு இன்மையே இதற்கான காரணம் என சமுகம் குற்றம்சாட்டுகிறது.
136மாணவர்கள், 14ஆசிரியர்களுள்ள விநாயகர் வித்தியாலயத்தில் குறிப்பாக முக்கியபாடமாகக்கருதப்படும் கணிதம் விஞ்ஞானம் போன்ற கருப்பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.
கணிதபாடத்திற்காக இருந்த ஒரேயொரு ஆசிரியர் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் இடமாற்றம்பெற்றுச் சென்றிருந்தார். அன்றிலிருந்து அந்த மாணவர்களுக்கு கணிதம் கற்கும் வாய்ப்பு உரிமை மறுக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் விஞ்ஞான பாடத்திற்கெனவிருந்த ஒரேயொரு ஆசிரியரும் மாகாணத்திலிருந்து இடமாற்ற உத்தரவுபெற்று இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார்.
ஆக, பின்தங்கிய பிரதேசத்திலுள்ள ஒரேயொரு பாடசாலையையும் இழுத்துமூடப்படுவதற்கு இவ்விடமாற்றங்கள் செய்யப்படுகின்றனவா? என அச்சமுகம் கேள்வியெழுப்புகிறது.
பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட பொதுநலஅமைப்புகள் இதுவிடயத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளன. தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிடின் திவீரபோராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாகவும் சூளுரைத்துள்ளன.