அத்தியாவசியப் பொருட்களை அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதனை உறுதிப்படுத்த விழிப்பூட்டும் நடவடிக்கை ஆரம்பம்

அத்தியாவசியப் பொருட்களை அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதனை உறுதிப்படுத்த விழிப்பூட்டும் நடவடிக்கை இன்றுமுதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
 
அரசினால் அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (07) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 
 
 
இதன்போது அரிசி ஆலைகள், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நெற்களஞ்சிய உரிமையாளர்கள், வியாபாரிகள் போன்றவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொhடர்பாகவும் இதற்கான தொடர் செயற்றிட்டம் தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
 
 
அரசின் அவசரகாலச் சட்டத்திற்கமைவாக கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்திருப்பவர்களுக் கொதிராக நடவடிக்கை எடுப்பதற்கான மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அறிவுறுத்தல் களுக்கமைவாக இச்செயற்பாடு முன்னெடுக்கப் படவுள்ளது.
 
 
இதுதவிர நெல்லை பதுக்கி வைத்திருப்பவர்கள், களஞ்சியப்படுத்தி வைத்திருப்பவர்களிடமிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அவற்றை நெற்சந்தைப்படுத்தும் சபை மூலம் கொள்வனவு செய்தல் அல்லது சட்டநடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக நுகர்வோர் அதிகாரசபை, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உட்பட நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
 
மேலும் சகல வியாபார நிலையங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்தல், தட்டுப்பாடின்றி பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைககளைக் கண்காணித்து விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
 
 
இவ்விசேட கூட்டத்தில் நுகர்வோர் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஆர். குமாரசிறீ, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், நெற்சந்தைப்படுத்தல் அதிகார சபை, விவசாய திணைக்களம், மாவட்ட விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
????????????????????????????????????
????????????????????????????????????

Related posts