அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் (வெள்ளிக்கிழமை) முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோர் இதற்க்கு முன்னர் கடந்த வருடம் 2017 இல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சிறைச்சாலைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று வரை யாரும் எம்மை வந்து பார்த்ததாகவோ, எமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவோ இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வுக்கு கொழும்புக்கு வந்து செல்கின்றனர் அவர்கள் மகசின் அனுராதபுரம் சிறைச்சாலைகளை கடந்தே கொழும்புக்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் கூட எம்மை வந்து பார்க்கவில்லை, எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அறிவதற்கு முயற்சிக்கவில்லை.
இதனால் சிறைச்சாலை நிர்வாகமும் எம்மை கண்டுகொள்வதாக இல்லை, எம்மீது கரிசனை கொள்ளாமல் மதிப்பில்லாமல் நடத்துகிறார்கள். அத்துடன் 25 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கு எம்மை பற்றி கதைப்பதற்கு எமது பிரதிநிதிகள் தயாராக இல்லை. வாக்கு தேவைக்கு மட்டும் எம்மை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்றும்” சிறை கைதிகள் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.