அமரர் ந.கேசவராஜன் அவர்களுக்கு பன்னாட்டு மட்டத்திலான நினைவு வணக்கம்.

“ஈழத்தமிழரின் திரைப்படத்துறையில் கேசவராஜன் ஒரு தூணாகத் திகழ்ந்தார்” என்று தாயகத்து திரைத்துறை கலைஞர் திரு.மா.ஏரம்பு தெரிவித்துள்ளார். 23/01/2021 சனிக்கிழமை, நடைபெற்ற zoom தொழில்நுட்பம் ஊடான இணையவழி நினைவு வணக்க நிகழ்வின் போதே இவ்வாறு நினைவுரை ஆற்றியுள்ளார். 
அமரர் நவரட்ணம் கேசவராஜன் அவர்களின் நண்பர்கள், ஆதரவாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நோர்வே, இலங்கை, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களின் ஒருங்கிணைவில் மிகவும் உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டிருந்தது. 
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலில், குறிப்பாக திரைப்படத்துறையில், தன்னார்வமாக இணைந்து கொண்ட அமரர் கேசவராஜன், 1986ம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட “தாயகமே தாகம்” என்ற முழுநீள திரைக்காவியத்தின் மூலம், தயாரிப்பாளராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, இவரால் நெறிப்படுத்தி, தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம், திசைகள், கடலோரக்காற்று போன்ற திரைக்காவியங்கள் பெருவெற்றியைப் பெற்றிருந்தன. 
2009ன் பின்னர் இவரால் தயாரிக்கப்பட்ட “பனைமரக்காடு” என்ற திரைப்படம் மூலம், போருக்கு பிந்திய தமிழர் தாயகத்தின் காட்சிகளை மீண்டும் திரைமொழியில் காவியமாக தொகுத்திருந்தார். 
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக 2019ம் ஆண்டு நோர்வே, பிரான்ஸ் நாடுகளுக்கும் வருகை தந்திருந்தார். இந்நிலையில் கடந்த 09/01/2021 அன்று சுகவீனம் காரணமாக தாயகத்தில் சாவடைந்திருந்தார். 
 
இவருக்கான இணையவழி நினைவுவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்திய பலரும், இவருடனான தமது கலைத்துறை பணிகளையும், நினைவுகளையும் எடுத்துரைத்தனர். 
இவருடைய வெற்றிக்குப் பின்னால்  இருந்த இவரது குடும்பத்தினரின் பங்களிப்பையும் எடுத்துரைத்தனர். 
இதே வேளை இவரது குடும்பத்தினரால் “கேசவராஜன் அறக்கட்டளை” என்ற பெயரில் நலன்புரி நிதியம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நலிவுற்றிருக்கும் தாயக கலைஞர்களின் வாழ்வியல் வளர்ச்சிக்காக இந்த அறக்கட்டளை துணைநிற்கும் என தெரிவிக்கப் படுகின்றது.

Related posts