அமைச்சர் அந்தஸ்தை வைத்து நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது. எமது மக்களின் நிரந்த சுயஉரிமைகளை முதலில் பெற்று நலிவடைந்துள்ள எமது பிரதேசங்களை நாங்களே அபிவிருத்தி செய்ய வேண்டும் என டெலே அமைப்பின் பிரதித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளருமாகிய இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற புளொட் அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய காலகட்டத்தில் எமது வீர மறவர்களின் தியாகங்களை மறந்து பலர் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய இளம்சந்ததிகள் எமது போராட்டங்களின் வரலாறு, வலி, வேதனைகளை உணராமல் இருப்பதும் வேதனைக்குரியது.
2001ம் ஆண்டு தமிழீழ விதலைப் புலிகளின் ஊடாக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர்களின் விடுதலை, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டோடு உருவாக்கப்பட்ட இக்கூட்டமைப்பில் இருந்து கொண்டு தற்போது ஒரு சிலர் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான வரலாறுகள் தெரியாதவர்களாகப் பலர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு எதிராகக் கதைப்பதும், அமைச்சர் பதவி பெறுவது தொடர்பிலுமாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் அமைச்சர் அந்தஸ்து பெறுவதற்காகப் போராடவில்லை. எமது மக்களின் உரிமை, விடுதலைக்காகவே போராடினோம். இந்த ஆயுதப் போராட்டத்தின் மூலமாகத்தான் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு அநீதிகள் நடைபெறுகின்றன என்ற விடயத்தை சர்வதேசம் அறிந்தது. ஜனநாயக வழியூடாக அக்காலத்தில் இவற்றை சர்வதேசம் அறியவில்லை. இந்த நாட்டில் அமைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபை முறைமை கூட எமது ஆயதப் போராட்டத்தின் மூலம் கிடைக்கப்பட்ட பெறுபேறேயாகும்.
அமைச்சர் அந்தஸ்தை வைத்து நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது. எமது மக்களின் நிரந்த சுயஉரிமைகளை முதலில் பெற்று நல்வடைந்துள்ள எமது பிரதேசங்களை நாங்களே அபிவிருத்தி செய்ய வேண்டும். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடிம்.
எனவே எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பெருவாரியாக வெற்றியடையச் செய்து எமது கோரிக்கைகளை, எமது உரிமை தொடர்பான விடயங்களை உரிய இடத்திற்குக் கொண்டு சென்று அவற்றைப் பெற்றெடுத்து எமது வளத்தைக் கொண்டு எமது பிரதேசத்தை நாமே முன்னேறச் செய்ய வேண்டும். இந்த அபிவிருத்தியே எமக்கு சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.