நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நோக்கிய அரசியல் பயணத்துக்கு அம்மாகாணங்களை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து அமோக ஆதரவு வெளிப்பட்ட வண்ணம் உள்ளது.
குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்று முதன்முதல் பேசிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தலைவராக அறியப்படுகின்ற வாசுதேவ நாணயக்கார வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருகின்ற பொது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானித்து உள்ளமை மகத்தான வரவேற்பை பெற்று அதீத கவனத்தை ஈர்த்து உள்ளது.
இவர் ராஜபக்ஸக்களின் மிக நெருக்கமான விசுவாசியாக உள்ளபோதிலும் சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்னிறுத்திய அரசியலை செய்பவர் அல்லர் என்றும் அதனால்தான் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் இவரால் பெரிதாக எழும்ப முடியாது உள்ளது என்றும் நம்புகின்ற சிறுபான்மை மக்கள் அதனால்தான் இவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிக்க திட்டமிட்டு இருக்கின்றார் என்று பேசுவதை செவிமடுக்க முடிகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் பிரசித்தி வாய்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒருவரான உலமா கட்சி தலைவர் அப்துல் மஜித் முபாரக் மௌலவியை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளில் ஒன்றாகிய நாம் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டு வருகின்ற பொது தேர்தலை பிரதானப்படுத்தி கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றார்.
கிழக்கு தேசம் வஃபா பாருக் கருத்து கூறுகையில் வாசுதேவ நாணயக்கார போன்ற கனவான் அரசியல்வாதியுடன் நிச்சயமாக இணைந்த அரசியல் செய்ய முடியும், ஆனால் முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவகாரத்து சம்பந்தப்பட்ட சட்டங்களில் அவரின் நிலைப்பாடு குறித்து அறிய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது என்றார்.
இதே நேரம் ஜனசஹன மனித நேய ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் துஷித தேசப்பிரிய கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் புதிய இடதுசாரி முன்னணியை கால் ஊன்ற வைக்கின்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார். இவர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள செயற்பாட்டாளர்களை சந்திப்பதற்காக எதிர்வரும் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.
சம்மாந்துறையில் பிரமாண்டமான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. அதே போல ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளர்கள் வருகின்ற திங்கட்கிழமை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை கொழும்பில் உள்ள அமைச்சு காரியாலயத்தில் சந்தித்து கட்சி செயற்பாடுகள், மக்கள் நலன் சார்ந்த சேவைகள் குறித்து பேச உள்ளார்கள்