அம்பாறைக்கு தேசியபட்டியல் எம்.பி கலையரசனை நியமித்தமைக்கு நன்றிகள். கையெழுத்துவேட்டை நிறைவில் த.தே.கூ. முக்கியஸ்தர் தவிசாளர் ஜெயசிறில்.!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எமது கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசனுக்கு வழங்கியமைக்காக கட்சி தலைவர் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறுவதாக த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தொவித்தார்.
 
அம்பாறை மாவட்டத்திற்கு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கவேண்டும் எனக்கோரி (9) காரைதீவில் கையெழுத்துவேட்டை நடைபெற்றது. கையெழுத்துவேட்டை நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தேசியப்பட்டியல் நியமனச் செய்தி கிடைத்தது.
 
அதனையடுத்து கையெழுத்துவேட்டையை நிறைவுசெய்து வைத்துரையாற்றுகையில் தவிசாளர் கி.ஜெயசிறில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் கடந்த இருநாட்களாக சோகமயமாக கவலையுடன் இருந்தார்கள். தமக்கான தமிழ்ப்பிரதிநிதித்துவம் பறிபோனமையே அதற்கான காரணமாகும். எதிர்காலம் சூனியமாகிவிட்டது போன்றதொரு நிலையிலிருந்தனர்.
 
இத்தகைய சூழலில் த.தே.கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி. நியமனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கவேண்டும் என்று நான் வலுவாகக் குரல் கொடுத்தேன். மட்டுமல்லாமல் நேற்றுமுன்தினம் திருமலைக்குச்சென்று கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் செயலாளர் கி.துரைராஜசிங்கம் பிரமுகர் எஸ்.குகதாசன் உள்ளிட்ட தலைமைகளிடம் கலந்துரையாடினேன்.மக்களின் அழுத்தங்களும் இருந்தன.
 
தேர்தலில் கேட்டுத்தோற்றவர்களுக்கு வழங்குவதில்லை என்றுமுதலில் கூறப்பட்டது. எனினும் எமது வேண்டுகோளின்பேரில் அம்பாறை மாவட்டத்திற்கே வழங்குவதாக உறுதியளித்தனர்.
இந்தநிலையில் இன்று இந்தப்பொருத்தமான தெரிவு இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஏலவே மாகாணசபை உறுப்பினராக தவிசாளராக சேவையாற்றியவர். நல்ல சேவைகளைச்செய்தவர். கட்சியில் நீண்டகாலமிருந்தவர். அனுபவமுள்ளவர். எனவே அவருக்குக்கிடைத்த வாய்ப்பை முன்பிருந்தவர்கள் போலில்லாமல்  சரியாக நேர்மையாக மக்களுக்குநல்ல சேவையாற்றுவார் என்ற நம்பிக்கையுள்ளது.
 
இதுவரைகாலமும் தமிழ் எம்.பி ஒருவர் இல்லாத பின்தங்கிய நாவிதன்வெளி அடங்கிய சம்மாந்துறைத்தொகுதிக்கு இவ்வரலாற்று நியமனம் கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். 
 
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியம் தொடர்ந்து பற்றுறுதியோடு நிலைப்பதற்கு கட்சி எடுத்த நடவடிக்கை சாலப்பொருத்தமாகும். இதைச்செய்திருக்காவிடின் எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் கூட்டமைப்புபற்றி கதைக்கமுடியாத துர்ப்பாக்கியநிலை இருந்திருக்கும். எனினும் சாணக்கியமாக கட்சிததலைமைகள் காலத்தின் அவசியம்கருதிய இத்தீர்மானத்திற்காக அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். என்றார்

Related posts