அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் (06) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 79.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதென, பொத்துவில் வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.நயிம் தெரிவித்தார்.
சாகாமம்குளம் பகுதியில், 78 மில்லிமீற்றரும் தீகவாபி பிரதேசத்தில் – 66 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் மாலை வேளையில், பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்வதால், கடல் கொந்தளிப்பாக இருக்குமென்றும், எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்ததாக அவர் கூறினார்.
இந்த மழை காரணமாக, நன்னீர் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளது என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம், இதனால் பாதிப்படைந்துள்ளது என்றும், மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில், 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 64.2 மில்லிமீறறர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதென, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளது என்றும் இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தின் கடற்பரப்பு, கொந்தளிப்பாகக் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளனர்.