(எஸ்.குமணன்,பாறுக் ஷிஹான்- )
பெண்களின் உணர்வுகளை மதித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே எமது இலக்கு என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் எமது ஆதரவு கிடையாது என அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஸி.ஆதம்பாவா தெரிவித்தார்.
அம்பாறை நிந்தவூரில் அரசியல் புரட்சிகர முன்னணியின் முதலாவது மகளீர் மாநாடும் ஊடகவியலாளர் சந்திப்பும் வெள்ளிக்கிழமை(13) முற்பகல் 10 மணியளவில் அல் அமீர் பிளேஸ் விருந்தினர் திறந்த மண்டபத்தில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
தற்போதய இலங்கையின் அரசியல் கள நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் காய் நகர்த்தல் பல சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.இதனால் தான் தேசியத்தை வலியுறுத்தி எமது அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.பெண்கள் எமது குடும்பம் உள்ளிட்ட சமூகத்தில் முக்கிய கதாநாயகிகள்.அவர்களுக்கான அரசியல் உரிமைகளை எந்த ஒரு கட்சிகளும் இதுவரை உரிய முறையில் வழங்கவில்லை.எமது கட்சி பெண் ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப தீர்மானித்துள்ளது.இந்த கட்சியின் மூலம் கிடைக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டு சாய்ந்தமருது நகரசபையை மலரசெய்ய போவதாகவும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை தீர்க்க தாம் எல்லை வரைபுகள் வரைந்து தயாராக வைத்திருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்
இந்த அரசியல் புரட்சிகர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்க இருக்கும் உறுப்பினர் ஆசனத்தில் தலைவராகிய நான் ஆறு மாதங்கள் இருப்பதுடன் என்னுடைய விருப்பின் பேரில் இன்னும் ஆறு மாதம் ஒரு பெண்ணை உறுப்பினராக அனுப்புவதுடன் மீதி காலங்களை சமனாக பிரித்து ஏனைய உறுப்பினர்களுக்கு வாக்கின் அடிப்படையில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தான் கல்முனை சாஹிரா கல்லூரி அதிபராக இருந்த போது என்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் வாக்களிக்க தயாராக உள்ளதாகவும் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலமை விரிவாக ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தின் கட்சியின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.