அம்பாறை மாவட்டத்தில் 55000 இற்கும் அதிகமான நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்ற சுவ தாரிணி ஆயுர்வேத பானத்துக்கான மூலிகை பொதிகள் வழங்கப்பட்டு உள்ளன என்று நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. எல். எம். நக்பர் தெரிவித்தார்.
நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை காலை இவரின் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதில் தேசத்தை காக்கும் இளைஞர் அணியின் பிரதி தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாமும் கலந்து கொண்டார். சிறப்பம்சமாக வைத்திய கலாநிதி நக்பரால் ஊடகவியலாளர்களுக்கு சுவ தாரிணி ஆயுர்வேத பானத்துக்கான மூலிகை பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது வைத்திய கலாநிதி நக்பர் ஊடகவியலாளர்களுக்கு மேலும் தெரிவித்தவை வருமாறு
இரண்டாவது, மூன்றாவது கொரோனா தொற்று அலைகளுக்கு மத்தியில் நாடு அந்தரித்து கொண்டு இருக்கின்றது. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் வழிகாட்டலில் முதலாவது அலையை தோற்கடித்தது போல இவற்றையும் தோற்கடிப்பதற்கு சுகாதார துறையினர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான அவசர சூழ்நிலையில் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடியின் ஆசிர்வாதத்துடன் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்ற ஆயுர்வேத பானம் கண்டறியப்பட்டு சுவ தாரிணி என்கிற பெயரில் நாடளாவிய ரீதியில் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இது ஒரு தேசிய வேலை திட்டமாக இருப்பினும் மத்திய அரசாங்கத்துக்கு உட்பட்ட நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையால் மிகுந்த உத்வேகத்துடன் இவ்வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை இத்தருணத்தில் பெருமையுடனும், பெருமிதத்துடனும் தெரிவித்து கொள்கின்றேன். அம்பாறை மாவட்டம் முழுவதும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் சுவ தாரிணி ஆயுர்வேத பானத்தின் பாவனையை அறிமுகம் செய்து இருக்கின்றோம்.
படையினர், அரசாங்க உத்தியோகத்தர்கள், தனியார் துறையினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என்று 55000 இற்கும் அதிகமான நபர்களுக்கு சுவ தாரிணி ஆயுர்வேத பானத்துக்கான மூலிகை பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கல்முனை பிராந்தியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, அலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் இவற்றை வழங்கி வருகின்றோம்.
அதிலும் குறிப்பாக கொரோனா தொற்றாளர்கள், தனிமைப்படுத்தப்பட்டு உள்ள குடும்பங்கள் மத்தியில் சுவா தாரிணி ஆயுர்வேத பானத்தின் பாவனையை அவசரமாக ஊக்குவித்த வண்ணம் உள்ளோம். பல நூற்று கணக்கான பொதுமக்கள் தினம் தோறும் எமது வைத்தியசாலைக்கு வந்து சுவ தாரிணி ஆயுர்வேத பானத்துக்கான மூலிகை பொதிகளை பெற்று செல்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.