அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் 30 ஆம் திகதி திருக்கோவில் பிள்ளையார் ஆலயத்தில் விசேட தேங்காய் உடைக்கும் பூஜை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணியினால் இவ்விசேட பூஜை நடைபெற்றது.
அந்தவகையில் கடந்த 24 ஆம்திகதி ஐநா மனிதவுரிமைகள் சபையின் இவ்வாண்டுக்கான 2ஆவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டது நிலையில் தமது போராட்டத்துக்கான நீதியை கோரும் வகையிலும் பல வருடங்களாக வீதியில் நீதிகேட்டுபோராடும் தம்மை இலங்கை அரசு கைவிட்டுவிட்டதை ஞாபகம் ஊட்டும் வகையிலும் இந்த விசேட தேங்காய் உடைக்கும் பூஜை ஒழுங்கு செய்யபட்டு நடாத்தபட்டதாக காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர் .
இங்கு நடைபெற்ற பூஜையின் பின்னர் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி இன்று நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றி எமது குறைகளை இறைவனிடம் மன்றாடும் வகையில் அதன்மூலமாக எமது உறவுகளை பெற்றுக்கொள்ளலாம் எனும் நோக்கில் இவ்விசேட தேங்காய் உடைக்கும் பூஜை ஒன்றிணை இன்று ஏற்பாடு செய்திருந்தோம்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் பின்னர் இன்றிலிருந்து எமது போராட்டம் மாதாந்தம் 30 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது அத்துடன் இக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் உடனடியாக இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பனவற்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் ஆனால் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் சென்றுள்ள நிலையில் ஏன் எமது உறவுகளை தேடிக்கண்டு பிடிக்கும் வசதிகளை செய்யவில்லை அவர்களுக்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியாகவுள்ளது இந்த இலங்கை அரசாங்கம் சகலரையும் ஒன்றாக பாராமுகம் காட்டாமல் சரி சமமாக பார்க்க வேண்டும்.
அத்துடன் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 41 வது அமர்வில் யுத்தக்குற்றம் தொடர்பாகவும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் சரியான முறையில் விசாரணை செய்து ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.