மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் ஜனாதிபதிக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை(24) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர ஐக்கிய சதுக்க முன்றலில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது ‘ 74வருட சாபக்கேட்டை இல்லாதொழிப்போம் – மக்களை துன்புறுத்தும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் பல்வேறு வாசகங்களும் எழுதப்பட்ட சுலோகங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினரர்.
இப்போராட்டத்தில் கொள்ளை பணம் எங்க, அடுப்பு மூட்ட கேஸ் இல்லை, நாட்டில் எதுவுமில்லை, பசில் வேண்டாம், மஹிந்த வேண்டாம், கோத்தாவே வெளியேறு, நாட்டில் எதுவுமில்லை மக்களுக்கு பசி,பசளை தா, பெற்றோல் தா, பசிலே வெளியேறு, கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு,வாகனம் ஓட பெற்றோல் இல்லை, நாட்டில் மின்சாரம் இல்லை, பிள்ளைகள் குடிக்க பால்மா இல்லை, குழந்தைகள் படிக்க கரண்ட் இல்லை, பரீட்சை இல்லை, அரசே வீட்ட போ, கோ கோம் கோத்தா, என கோஷங்களை போராட்டகாரர்கள் எழுப்பினர்.
இதன் போது ஜே.வி.பியின் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ , தேசிய மக்கள் சக்தி பிரதேச அமைப்பாளர்கள் ,உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் அன்றாடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.