கொரோனா எனும் கொடிய வைரஸின் தொற்றால் உலகமே முடங்கிவரும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருவதை அறியக்கூடியதாக உள்ளதாகவும், அரசாங்கம் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், இவைகள் பாராட்டப்படவேண்டியவை என்றும் இதேவேளை கொரோனா வைரஸின் அச்சத்தில் நிர்க்கதியாகியுள்ள சாதாரண மக்கள் விடயத்தில் அரசாங்கம் விரைவான தீர்மானம் ஒன்றை எடுத்து அவர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்க முன்வரவேண்டும் என்று திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகிலுல் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பிலும் இதனால் மக்களுக்கு விழிப்பூட்டும் விதத்திலும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த அவசர ஊடக சந்திப்பு அவரது கல்முனை காரியாலயத்தில் 2020.03.20 ஆம் திகதி இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹரீஸ், இலங்கையில் கொரோனா வைரஸின் தோற்றாலும் அதன் அச்சத்தின் காரணமாகவும் நாளுக்குநாள் அரச இயந்திரம் முடக்கப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக அன்றாடம் தொழில் செய்து தாங்களது ஜீவனோபாயத்தை நாடாத்தி வரும் சாதாரண மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இவர்கள் அன்றாட உணவுப் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிய அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலையை இல்லாமல் செய்ய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறைந்தது உலர் உணவுப்பொதிகளையாவது வழங்கி மக்களின் கஷ்ட்டங்களைப் போக்க அரசு முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையைப் போக்க அரசாங்கம் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதனூடாகவே இங்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி கொரோனாவை நாட்டிலிருந்து விரட்டியடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் ஒன்றுக்கான வேட்புமணுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் தினம் பின்னர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஊடகங்கள் விசேடமாக முகநூல்களில் எழுதுவோர் தேர்தல் விடயங்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்காது நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை போக்க தாங்களால் முடிந்தவரை எழுதி நாட்டுக்கும் மக்களுக்கும் உதவ முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசியல் பேதங்களை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு நாட்டினதும் மக்களினது நன்மைகருதி, ஜனாதிபதிக்குள்ள விசேட அதிகாரத்தைப் பிரயோகித்து கலைக்கப்பட பாராளமன்றத்தைக் அவசரமாக கூட்டி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.