அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைப்பது தொடர்பான பயிற்சி பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிறைவு
அனர்த்தங்களின் போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைப்பது தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விசே இருநாள் செயலமர்வு மட்டக்களப்பில் இன்று (14) நிறைவு பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் விழிகாட்டலின்கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடு செய்திருந்த இச்செயலமர்வு யுனிசெப் மற்றும் செரி அமைப்புக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
மன்முனை வடக்கு, ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுகளில் பொதுமக்களிடையே நேரடியாக செயற்படுகின்ற சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமூக சேவை உததியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களென தெரிவு செய்யப்பட்ட 30 அரச உத்தியோகத்தர்களுக்கு அனர்த்தங்களின் பொழுது சிறுவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை குறைப்பது தொடர்பாக விசேட பயிற்சி இவ்விருநாள் செயலமர்வினூடாக வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் இரண்டாம் நாளாகிய இன்று பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது இந்நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என். அன்றூ லசாரஸ்;, செரி அமைப்பின் என்.ஈ. தர்சன், வளவாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பயிற்சியாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்