அரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கைச் செலவிற்கு போதிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் –
அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் மே தினச் செய்தி.
(கல்லடி நிருபர்)
அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வாழ்க்கைச் செலவிற்கு போதியதாக சம்பள உயர்வு வழங்குதல் வேண்டும் என்று அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற் சங்கம் தனது மேதினச் செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் விடுத்துள்ள இச்செய்தியில், 2016 ஆம் வருடத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை தருவதாகக் கூறி, இத்தொகையினை 2020 ஆம் ஆண்டு வரை 05 வருடங்களுக்கு, வருடமொன்றிற்கு இரண்டாயிரம் ரூபாவிற்கும் குறைவான தொகையினை சம்பள அதிகரிப்பாக வழங்கப்பட்டது. ஆனால் இக்காலப் பகுதியில் வாழ்க்கைச் செலவு, மிகக் கடுமையாக ஏறிச் சென்றுள்ளது. ஒரு மாதத்திற்கு கிடைக்கப் பெறுகின்ற சம்பளம், குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் ஆரம்ப நிலை உத்தியோகத்தர்களுக்கு மாதத்தின் பாதி நாட்களுக்குக்கூட ஈடு செய்யமுடியாது. அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
வாழ்வாதார அடிப்படைத் தேவைகளுக்குரிய சீனி, பிஸ்கட், பால்மா, எண்னெய் என்று அத்தியவசிய பொருட்களுக்கான விலைகள் மிகவும் அதிகரித்துள்ளன. மின்சாரக் கட்டணம் நீர்க் கட்டணம் போன்றனவற்றை செலுத்திக் கொள்ள முடியாமல் இவர்கள் மிகவும் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
வருடத்திற்கொரு தடவை வரும் உற்சவ தினங்களை எண்ணி மகிழ்ந்து ஆனந்தமடைவதற்கு மாறாக, தற்போது அரச உத்தியோகத்தர்கள் கலலையும் வேதனையடைகின்றனர்.
குடும்பத்தினரின் புத்தாடை, பாரம்பரிய இனிப்பு வகைகள், விசேட உணவு உறவினர் அளவலாவுதல் என்று வருடத்தின் ஒரு நாள்கூட மகிழ்ச்சியாக கழிக்க முடியாத அவலநிலை அரச உத்தியோகத்தர்களுக்கே உள்ளது.
இலவச கல்வி நடைமுறை இருந்தாலும், உயர்தர போட்டிப் பரீட்சையில், பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லாமல் வெற்றி இலக்கை எண்ணிப் பார்க்க முடியாத நிலைமை காணப்படுவதை யாராலும் மறுக்க முடியாது. போக்குவரத்திற்கும், பிரத்தியோக வகுப்பு கட்டணத்திற்கும் மாதமொன்றிற்கு பத்தாயிரம் ரூபா போதமல் உள்ளது. இரண்டு பிள்ளைகள் பிரத்தியேக வகுப்பிற்கு செல்லும் ஒரு வீட்டிற்கு மாதமொன்றிற்கு இருபதாயிரம் ரூபா பிரத்தியேக வகுப்பிற்கான செலவிற்கு மாத்திரம் தேவையாக உள்ளது.
25 வருட சேவைக் காலத்தை கொண்ட ஒரு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரின் வருமானம் சுமார் நாற்பதாயிரம் ரூபாவாகவே உள்ளது. இதில் ஓய்வூதிய கொடுப்பனவிற்கும் ஏனைய கழிப்பனவுகளும் நீங்கலாக மட்டுமட்டாக முப்பதாயிரம் ரூபாவே கிடைக்கப் பெறுகின்றன. இதனால் அரசாங்க உத்தியோகத்தர்கள் வாழ்க்கைச் செலவிற்கு போதிய வருமானமின்றி நாள்முழுக்க மிகவும் சஞ்சலத்துடனும், மன உழைச்சலுடனும் கவலையுடனும் காலத்தைக் கழித்து கொண்டிருக்கின்றனர்.
எனவே, ஆரம்ப நிலை உத்தியோகத்தர்களின் அடிப்படைச் சம்பளம் ரூபா 50,000/= இல் இருந்து ஆரம்பிக்க கூடியதாக அனைத்து உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் மறுசீரமைக்கப்படல் வேண்டும் என்று இம்மேதினத்தில், அரசாங்கத்தை பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றைய நாளில் வெறுமனே ஒரு கோரிக்கையாக விடுத்து, எமது சங்கம் ஓய்ந்து விடாது. இன்றைய நாள் எமது கோரிக்கைகள் தொடர்பான அழுத்தங்களை வழங்கும் ஆரம்ப நாளாகும். எமது இக்கோரிக்கையை வென்றெடுக்கும் வரை இதற்கான அழுத்தங்களை வழங்குவதில் ஓயப்போவதில்லை. இக்கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து தொழிற் சங்ககங்களும், உத்தியோகத்தர்களும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.