வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச சேவைக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக உள்ளீர்ப்பது தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, உள்நாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, பயிற்சிகளுக்காக இதுவரை 5,000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.
இதில் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக மேலும் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கை இதுவரை நிறைவுசெய்யப்படவில்லையெனவும் கூறினார்.
எவ்வாறாயினும், பயிற்சிகளுக்கான முதலாவது குழுவுக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு வகைப்படுத்தல் இன்றி விசேட தேவையுடைய பட்டதாரிகள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளை உள்ளீர்க்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரச சேவை பயிற்சிகளுக்காக உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்ற பட்டதாரிகளை உள்ளீர்க்கும் திட்டத்துக்கு வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
இது மனித உரிமை மீறல் நடவடிக்கை என குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை மாற்றி வேலையற்ற பட்டதாரிகள் விரைவில் அரச சேவைகளுக்கு உள்ளீர்க்கப்பட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.